Friday, December 16, 2011

தண்டவாளங்கள்...


அங்கே பார்க்கிறாயா,
இருதண்டவாளங்களை...
அதிலே போகிறதே புகைவண்டி
அதுதான் - நம்
புனிதமான காதல் போல...
ரயில் பயணங்கள் ஒவ்வொன்றும் - நம்
இனிமையான நினைவுகள் போல...
ரயிலின் உரசல்கள் எல்லாம் - நம்
நெஞ்சம் தாங்கும் வலிகள் போல...
அதில் வரும் அதிர்வுகள் எல்லாம் - நம்
இதயங்களின் துடிப்புகள் போல...
இத்தண்டவாளங்கள்,
இறுதிவரை பிரியப்போவதில்லை
நம்மைப்போல...

கடன்...


நீ வைத்த நேசமும்-உனை
வருத்தி செய்த உதவியும்-என்
நெஞ்சில் காலத்தால் அழியாதவை-எனினும்
என்றும் கடனாளியாகவே நான்...

அன்பு...


நீ என்னை,
வெல்ல நினைத்தாலும் சரி,
கொல்ல நினைத்தாலும் சரி
உன் வார்த்தைகள் மட்டுமே
போதுமானது..

நீ அறிவாயா...


பூத்திருக்கும் காளானே...
காத்திருப்பாய் என்று தெரிந்தும்,
கதிரவன் மூச்சில்
கலைந்து காணாமல்
போகும் போது,
கலங்கிப் போகுதடி
உன் கார்முகிலின் மனசு...!!!

Sunday, October 02, 2011

பிரிவது எப்படி?

உறவே
என் கண்ணோடு கலந்திருந்தால்
கண்ணீரோடு விட்டிருப்பேன்.
என் உயிரோடு கலந்துவிட்ட
உன்னைப் பிரிவது எப்படி?

என்னோடு உன் காதல்


உன் வார்த்தை சுகமானது
என் நெஞ்சோடு இனிக்கின்றது...
உன் நேசம் பொல்லாதது
என்னைக் கொல்லாமல் கொல்கின்றது...
உன் காதல் வலியானது
என் கண்ணோடு வழிகின்றது ...
என் வாழ்க்கை ஒன்றானது
தினம் விதியோடு அழுகின்றது...

Sunday, September 18, 2011

நினைவுகள் .


என்னை விட்டு
எங்கோ தொலைவில் நீ
இப்போது பூத்த
மல்லிகையின் வாசமாய்
என்னை சுற்றுகின்றது
உந்தன் நினைவுகள் ..

நீ


நிஜமாய்
நினைவாய்
நிழலாய்
நீயே இருக்கையில்
எப்படிச் சொல்வேன்
இன்னொரு திருமணத்திற்கு
சம்மதம் நான்?

மன்னித்துவிடு..


எனக்குள்ளே
ஆயிரம் தடவையாவது
உன்னிடம் மன்னிப்பு
கேட்டிருப்பேன்
என்ன செய்து என்னாகும்
அள்ளி தெளித்துவிட்ட
அந்த வார்த்தைகளை
கிள்ளி எடுத்துவிட
என்னால் முடியாதே
ஆதலால் மறுபடியும்
கேட்கின்றேன்
மன்னித்துவிடு..

உங்கள் டயரி



உங்கள் டையரிகளின்
ஓரிரு பக்கங்களை நானும்
தொட்டிருக்க கூடும் ..
என்னோடு பழகிய நாட்களின்
கனமான காயங்களின்
பரிசாக அவை ..
என்றும் கிழிக்கப்படாமல் இருக்கும் ..

வாழ்வு



தெளிவற்ற பார்வைகள்
தவறான கணிப்புகள்
பிழையான புரிந்துணர்வுகள்
தப்பான முடிவுகள்
அதன்பொருட்டு
தீராமல் நீளும்
கவலைகளை
தொடர்கதையாக்கி
தொடர்கின்றது
வாழ்வின் பயணங்கள்

உன் காதல்

உன் காதல் மட்டும் போதும்
சாவிற்கும் வாழ்விற்குமான
இந்த வாழ்க்கை போராட்டத்தில்
உயிரோடு என்னை வைத்திருக்க

புரிதல்


திறந்து பார்க்கும் ஆசையில்
மாறி மாறி முயற்சித்து
முடியாமல் ..
எல்லாப் பக்கமும்
அடித்துவிட்டாய்
சம்மட்டியால் என்னை
எனக்குள் நானே அமிழ்ந்து
நொறுங்கியிருக்கின்றேன்..
எனக்கே புரியாத என்னை
எப்படி முடியும்
இனி உன்னால்
படிக்க ..?

ஏன் போனாய்

என்னை மட்டும் தான்
நீ விட்டுப்போகின்றாய்
என நினைத்தேன்
என்னோடு சேர்த்து
ஏன் கவலைகளையும்
விட்டுப்போனாய்
என்னால் முடியவில்லை
எல்லாவற்றையும் தாங்குவதற்கு
என்னோடு வந்துவிடு
அல்லாவிடில்
என்னை நீ கொன்றுவிடு

Wednesday, July 06, 2011

வெறுமை


இரவின் தண்மையில்
மொட்டை மாடியில் நிலவை ரசித்தபடி
பஸ்ஸின் யன்னலோர இருக்கைகளில்
கடந்து போகும் மலைகளை பார்த்தபடி
தினசரி பயணங்களில் காணும்
ஒவ்வொரு புதுமுகங்களையும் ஆராய்ந்தபடி
கடந்த காலங்களின் கனத்த நிமிடங்களை
மீட்டுப் பார்த்தபடி
முயன்று பார்க்கிறேன்
ஏதாவது எழுதலாம் என்று ....
எங்கேயும் போகமாட்டேன் என
அடம்பிடித்து நிற்கிறது
என்னுடன் ....

Thursday, May 12, 2011

ஒரு மரணம்




இன்றாவது யாரேனும்
இறந்திட வேண்டுமென
பிரார்த்திக்கும்
சவப்பெட்டி கடைக்காரன்
************************
மரணத்துக்காகவே மரணித்த
மலர்களாய் மலர்வளையங்கள்
************************
நீ விட்டுப் போன நாளில்
கண்கள் போதவில்லை - அவள்
கவலை தீர்ப்பதற்கு ..
ஓவென்று கத்தி
ஒப்பாரி வைக்கின்றாள்
***************************
ஊரழைத்து உண்ணவைத்து -உன்னை
உலகில் மீண்டும் வாழவைக்கும்
ஆத்ம சாந்தி அந்தியட்டி.

Saturday, April 16, 2011

அந்நியன்

விடிவெள்ளி மறையாத காலை
விழிதூங்க முடியாத கனவு
விமான பயணம்.....
என்ன வாங்கலாம்
என்ன கொடுக்கலாம்
எல்லோர் நினைவும்
முட்டி மோதிற்று...
அம்மாவுக்கு அப்பாவுக்கு
ஆசைத்தங்கைக்கு
அடுப்படி வரைக்கும் என்ன தேவையோ
கணக்கு போட்டாயிற்று
அம்மா கூட அறுபது நாள்
தங்க போகிறேன்
நினைவின் சுகத்தில்
அந்நாளும் வந்தது ...
அத்தையும் மாமாவும்
ஏயார்போர்டில்
அப்பாவை காணலை
பயணம் தொடங்கிற்று.....
பொண்ணை கொடுத்த இடத்தில
கையை நனைக்கிறதே...
அப்பாவும் அம்மாவும்
அரைநாள் தங்கவும்
சங்கடப்பட
அத்தையிடம் மெல்லகேட்டேன்
அங்கைபோய்
நிக்கபோறியளோ?!
நுளம்பு பிள்ளை
ஆஸ்பத்திரியும் பெரிசில்லை
அவையள் வந்து நிக்கட்டும்
அல்லது போய் பகலோட திரும்பிடுங்கோ
ஓவென்று அலறும்
என்மனது அறியாமல்
அடுக்கிப்போனா அடுக்கடுக்காய்
எங்களின் இரண்டு மாத
ப்ரோக்ராமை
அத்தை வீட்டுக்கு
அடிக்கடி வர
அம்மா சங்கடப்பட
ஆசை தங்கை
என்பிள்ளைகளை தூக்க கூட
பயந்துநிற்க
எனக்கு பிடிக்கும் என்று
அப்பா வாங்கிவந்த
பிலாப்பழம் மணம் வீசியபடி
மூலையில் கிடக்க
எல்லாவற்றிற்கும்
அந்நியனாய் எந்நாட்டில்
நான் ...

Sunday, April 03, 2011

சிதறல்கள்


உனக்கு பிடிக்கும் என்று
ஒவ்வொன்றாய் நான் மாற
உன்னை பிடிக்கலை என்று
உயிரோடு கொன்றாய் என்னை.
*****************************************
நிலவை வெறுக்கவா
கனவை முறைக்கவா
நீயற்ற இரவுகளில்
*****************************************
எல்லாவற்றையும் மாற்றிவிடுவேன்
நினைப்பது போலவே செய்துமுடிப்பேன்
நேற்று மட்டும் மீண்டும் கிடைத்தால்
கனவுகளோடு நேற்று போலவே இன்றும்
****************************************
வசந்தத்தை தொலைத்தவர்கள் வாழ்வில்
தென்றல் என்றும் வீசாது விடினும்
வாடையாவது வீசட்டுமே
வானம் பூமி இரண்டும் வாழ்த்த
வாழும் நாளும் தோன்றட்டுமே

Wednesday, March 09, 2011

மன்னிப்பாயா

மன்னிப்பாயா ??
என்னைச் சுமந்தபடி
சுவரோரமாய் நீ
உன்னைச் சுமந்தபடி
மணமேடையில் நான்
காலங்கள் கடந்தது
கமலியின்
கல்யாண நாளில்
ஹாய் என்கிறாய்
அன்று கழுத்தைக் கொடுத்த நான்
இன்றுனக்கு ஹாய்
சொல்லக் கூட முடியாமல்
கட்டுபட்டு நிற்கின்றேன்
மன்னிப்பாயா

மன்னிப்பாயா
என கேட்கிறேன் நான்
அது கேட்க இவளுக்கு மனசிருக்கா
என நினைக்கிறாய் நீ

மன்னிப்பு கேட்பது ஈசி
மன்னித்து விடுவது கஷ்டம்
அட்வைஸ் விடுவது ஈசி
அட்வைஸ் கேட்பது கஷ்டம்

காதல் அழிவதில்லை

அன்று போலவே இன்றும்
அவள் வீட்டு வாசலில் நான்
கண்ணில் அதே காதல்
நெஞ்சில் அதே உருக்கம்
மனதில் அதே ஏக்கம்
என்னை வரவேற்கிறாள் அவள்
தன் பேரக் குழந்தையுடன்
காதல் அழிவதில்லை என்பதை
அவள் கண்ணில் தான் நான்
வாசித்தேன் யாசித்தேன்