Friday, December 16, 2011

தப்பு...


என் மேல் இருக்கும் தப்பு

பெருமளவில் இருந்தாலும்,

உன் மேல் இருக்கும் தப்பை

சுட்டிக் காட்டி தப்பிக் கொள்கிறேன் - நான்

தப்பிக்க வேறு வழி தெரியாமல் - இது

அதைவிட பெரிய தப்பு இல்லையா...?

மறைந்த மறவர்களுக்காக...


மண்ணை நினைத்ததும்
மனசு குளறுது மடிந்த மறவர்களே... - உம்மை
நெஞ்சம் நினைக்காத
நேரம் ஒன்றில்லை நேய வீரர்களே...
பூத்துக் கிடந்த மண்
வெந்து கிடக்குது பொறுக்க முடியலையே...
பொது இடத்தில் கூட நம் மனம் திறந்து
ஒரு சொல் சொல்ல முடியலையே...
புலம் பெயர் தமிழன்
வேர்வை எல்லாம் புல்லுக்கு பாய்கிறதே...
புண்ணாய்ப் போன எங்கள் மனசில்
வேல் தான் பாய்கிறதே...
காற்று வீசிடும் என்கிற நம்பிக்கை
காத்துக் கிடக்கின்றோம்...
காலத்தால் அழியாத உங்கள் கல்லறை
கண்டு பணிகின்றோம்...
என்றும் உங்கள் நினைவுகளுடன்...........

மலரே...


மொட்டென்னும் பெயரில்
சட்டென்று வளர்வாயடி...
ஒரு சில நாளில்
உன் முகம் திறப்பாயடி...
ஓராயிரம் பேர்
உன்னை ரசிப்பாரடி...
ஒருவனுக்காக நீ
காத்து இருப்பாயடி...
உன்னை நாடி வரும் - வண்டின்
ஓசை அறிவாயடி...
ஒத்திகை இல்லாமல்
உன்னைக் கொடுப்பாயடி...
தேடி வந்தவன்
தேவை முடியுமடி... - அவன்
திரும்ப நினைக்கையிலே -உன்
திரு முகம் வாடுமடி...
வாழ்ந்த ஒரு நாளில்
வள்ளலாய் வாழ்வாயடி...
இறந்தும் உன் உடல்
மண்ணுக்கிரையாகுமடி ...
மலரே இதுதான் வாழ்வின் நியதியடி...
மறந்தும் மறுபிறப்பு பிறக்க நினைக்காதே...

புண்ணாகும் மனசு...


சேற்றில் பிறந்த தாமரை,
புனிதமாகி அந்தப்
பெருமாளை சென்றடைகிறது...
சிப்பிக்குள் வளர்ந்த முத்து,
பெறுமதி மிக்கதாகி
பேரம் பேசப்படுகிறது...
மண்ணுக்குள் உருவான பொன்,
மலை போல் விலை பேசி
மதிப்புக் கொடுக்கப்படுகிறது...
மடியில் சுமந்த உன் அன்னை
பண்ணிய தவறுக்கு அறியாமல் பிறந்த -உன்
மனசு மட்டும் ஏன் புண்ணாக்கப்படுகிறது...
இந்த மனசறியா மானிடர்களால்.....

தண்டவாளங்கள்...


அங்கே பார்க்கிறாயா,
இருதண்டவாளங்களை...
அதிலே போகிறதே புகைவண்டி
அதுதான் - நம்
புனிதமான காதல் போல...
ரயில் பயணங்கள் ஒவ்வொன்றும் - நம்
இனிமையான நினைவுகள் போல...
ரயிலின் உரசல்கள் எல்லாம் - நம்
நெஞ்சம் தாங்கும் வலிகள் போல...
அதில் வரும் அதிர்வுகள் எல்லாம் - நம்
இதயங்களின் துடிப்புகள் போல...
இத்தண்டவாளங்கள்,
இறுதிவரை பிரியப்போவதில்லை
நம்மைப்போல...

கடன்...


நீ வைத்த நேசமும்-உனை
வருத்தி செய்த உதவியும்-என்
நெஞ்சில் காலத்தால் அழியாதவை-எனினும்
என்றும் கடனாளியாகவே நான்...

அன்பு...


நீ என்னை,
வெல்ல நினைத்தாலும் சரி,
கொல்ல நினைத்தாலும் சரி
உன் வார்த்தைகள் மட்டுமே
போதுமானது..

நீ அறிவாயா...


பூத்திருக்கும் காளானே...
காத்திருப்பாய் என்று தெரிந்தும்,
கதிரவன் மூச்சில்
கலைந்து காணாமல்
போகும் போது,
கலங்கிப் போகுதடி
உன் கார்முகிலின் மனசு...!!!

Sunday, October 02, 2011

பிரிவது எப்படி?

உறவே
என் கண்ணோடு கலந்திருந்தால்
கண்ணீரோடு விட்டிருப்பேன்.
என் உயிரோடு கலந்துவிட்ட
உன்னைப் பிரிவது எப்படி?

என்னோடு உன் காதல்


உன் வார்த்தை சுகமானது
என் நெஞ்சோடு இனிக்கின்றது...
உன் நேசம் பொல்லாதது
என்னைக் கொல்லாமல் கொல்கின்றது...
உன் காதல் வலியானது
என் கண்ணோடு வழிகின்றது ...
என் வாழ்க்கை ஒன்றானது
தினம் விதியோடு அழுகின்றது...

Sunday, September 18, 2011

நினைவுகள் .


என்னை விட்டு
எங்கோ தொலைவில் நீ
இப்போது பூத்த
மல்லிகையின் வாசமாய்
என்னை சுற்றுகின்றது
உந்தன் நினைவுகள் ..

நீ


நிஜமாய்
நினைவாய்
நிழலாய்
நீயே இருக்கையில்
எப்படிச் சொல்வேன்
இன்னொரு திருமணத்திற்கு
சம்மதம் நான்?

மன்னித்துவிடு..


எனக்குள்ளே
ஆயிரம் தடவையாவது
உன்னிடம் மன்னிப்பு
கேட்டிருப்பேன்
என்ன செய்து என்னாகும்
அள்ளி தெளித்துவிட்ட
அந்த வார்த்தைகளை
கிள்ளி எடுத்துவிட
என்னால் முடியாதே
ஆதலால் மறுபடியும்
கேட்கின்றேன்
மன்னித்துவிடு..

உங்கள் டயரி



உங்கள் டையரிகளின்
ஓரிரு பக்கங்களை நானும்
தொட்டிருக்க கூடும் ..
என்னோடு பழகிய நாட்களின்
கனமான காயங்களின்
பரிசாக அவை ..
என்றும் கிழிக்கப்படாமல் இருக்கும் ..

வாழ்வு



தெளிவற்ற பார்வைகள்
தவறான கணிப்புகள்
பிழையான புரிந்துணர்வுகள்
தப்பான முடிவுகள்
அதன்பொருட்டு
தீராமல் நீளும்
கவலைகளை
தொடர்கதையாக்கி
தொடர்கின்றது
வாழ்வின் பயணங்கள்

உன் காதல்

உன் காதல் மட்டும் போதும்
சாவிற்கும் வாழ்விற்குமான
இந்த வாழ்க்கை போராட்டத்தில்
உயிரோடு என்னை வைத்திருக்க

புரிதல்


திறந்து பார்க்கும் ஆசையில்
மாறி மாறி முயற்சித்து
முடியாமல் ..
எல்லாப் பக்கமும்
அடித்துவிட்டாய்
சம்மட்டியால் என்னை
எனக்குள் நானே அமிழ்ந்து
நொறுங்கியிருக்கின்றேன்..
எனக்கே புரியாத என்னை
எப்படி முடியும்
இனி உன்னால்
படிக்க ..?

ஏன் போனாய்

என்னை மட்டும் தான்
நீ விட்டுப்போகின்றாய்
என நினைத்தேன்
என்னோடு சேர்த்து
ஏன் கவலைகளையும்
விட்டுப்போனாய்
என்னால் முடியவில்லை
எல்லாவற்றையும் தாங்குவதற்கு
என்னோடு வந்துவிடு
அல்லாவிடில்
என்னை நீ கொன்றுவிடு

Wednesday, July 06, 2011

வெறுமை


இரவின் தண்மையில்
மொட்டை மாடியில் நிலவை ரசித்தபடி
பஸ்ஸின் யன்னலோர இருக்கைகளில்
கடந்து போகும் மலைகளை பார்த்தபடி
தினசரி பயணங்களில் காணும்
ஒவ்வொரு புதுமுகங்களையும் ஆராய்ந்தபடி
கடந்த காலங்களின் கனத்த நிமிடங்களை
மீட்டுப் பார்த்தபடி
முயன்று பார்க்கிறேன்
ஏதாவது எழுதலாம் என்று ....
எங்கேயும் போகமாட்டேன் என
அடம்பிடித்து நிற்கிறது
என்னுடன் ....

Thursday, May 12, 2011

ஒரு மரணம்




இன்றாவது யாரேனும்
இறந்திட வேண்டுமென
பிரார்த்திக்கும்
சவப்பெட்டி கடைக்காரன்
************************
மரணத்துக்காகவே மரணித்த
மலர்களாய் மலர்வளையங்கள்
************************
நீ விட்டுப் போன நாளில்
கண்கள் போதவில்லை - அவள்
கவலை தீர்ப்பதற்கு ..
ஓவென்று கத்தி
ஒப்பாரி வைக்கின்றாள்
***************************
ஊரழைத்து உண்ணவைத்து -உன்னை
உலகில் மீண்டும் வாழவைக்கும்
ஆத்ம சாந்தி அந்தியட்டி.