Saturday, October 13, 2012

புன்னகை


உன் உதடுகள்
புன்னகைக்க மறுத்ததால்
வறண்டு கிடக்கிறது
இந்தப் பூமி

Monday, March 19, 2012

வான்நிலா...


வானிருக்கும் நிலாவை
பார்த்து ரசித்ததுண்டு.
அவைக்கான இடைவெளியை-நாம்
எண்ணிப் பார்த்ததில்லை.
எமக்கான இடைவெளி
எவ்வளவாக இருந்தாலும்,
நீயும் என்னில்
என்றும் நிலவை போல...

ஓடம்...


ஆழ்கடலில் என் ஓடம்
அலைகளுக்கு ஏற்றபடி,
விதியால் வீசும் புயலாகவும்,
வீசிக் கொடுக்கும் காற்றாகவும்
உந்தன் நினைவுகள்.
கலங்கரை காணாத என் ஓடம்
காற்றிற்கு ஏற்றபடி
கரை சேரத் துடிக்கிறது...

Sunday, March 18, 2012

என்னை விட்டு நீ ....



நீயில்லாத நாட்களின்
நினைவுகளின் வெறுமை
ஆயிரம் பேர் என்னை
அரவணைத்திருந்தபோதும்
தனிமையயே கொடுத்தது
எனக்கு..................

எங்கனம் புரிந்திருப்பாய்...


நான் பார்த்து ரசித்த நிலா -உன்
பக்கம் வந்திருக்கும்,
பார்க்காமல் போயிருப்பாய்.
தழுவிச் சென்ற தென்றல்
உன்னை வருடிச் சென்றிருக்கும்,
நெருடலாய் உணர்ந்திருப்பாய்.
எனைக் கடந்த கரு மேகம்-உன்
காலடியில் விழுந்திருக்கும்,
வெள்ளம் என்று எண்ணி
விலகி நடந்திருப்பாய்.
என் உணர்வுகளைப் புரியாத
உன்னுள்
புதைந்த என் இதயத்தை - நீ
எங்கனம் புரிந்திருப்பாய்...

கண்ணியம்...


உன் இரும்பான இதயம்
பட்டதும்,
நொருங்கும்
என் கண்ணாடி இதயம்.
பார்க்கிறேன்-அங்கே
மறுபடி உன் விம்பம்.
கேட்கிறேன்-காரணம்
காதலின் கண்ணியமாம்
சொல்கிறது
களவறியாத கண்ணாடி...

காதல்...


மனம் நினைக்கையில்
வடிக்கும் கவிதையிலும்,
உயிர் வலிக்கையில்
ஓடும் கண்ணீரிலும்,
ஒளிந்து கொள்கிறது
என் காதல்...

நினைவுகள்...


நெஞ்சுக் குழியில் இருந்து வெளிவரும்
உன் நினைவுகள்,
தொண்டைக் குழிவரை வந்து
தொலைந்து போகின்றன-உன்னை
துன்பபடுத்தாமல்...

காணிக்கை...


எனை மறந்து உனை நினைக்கும்
மணித்துளிகள்,
தடையின்றி தலையணை நனைக்கும்
கண்ணீர்த்துளிகள்,
மறுப்பின்றி மனதில் இனிக்கும்
கனாத்துளிகள்,
கருவின்றி கலங்க வைக்கும்
கவித்துளிகள்,
இவை யாவும் என் அன்பின்
காணிக்கையாக...

திருப்தி...


நீயற்ற என் வாழ்வு
நிலவற்ற வானம் போன்றது...
வானோடு நிலவிருக்கும் அழகிற்கு
வார்த்தைகள் இல்லை -ஆனால்
உன் நினைவுகள்,
அந்த வானோடு கலந்திருக்கும்
நட்சத்திரங்கள் போன்றவை...
நிலவு போல்,
இடையிடை வந்து போகும்
உன்னைவிட - என்னைப்
பிரியாது இருக்கும் உன் நினைவுகளால்
நான் பூரண திருப்தி அடைகிறேன்...

Friday, December 16, 2011

தப்பு...


என் மேல் இருக்கும் தப்பு

பெருமளவில் இருந்தாலும்,

உன் மேல் இருக்கும் தப்பை

சுட்டிக் காட்டி தப்பிக் கொள்கிறேன் - நான்

தப்பிக்க வேறு வழி தெரியாமல் - இது

அதைவிட பெரிய தப்பு இல்லையா...?

மறைந்த மறவர்களுக்காக...


மண்ணை நினைத்ததும்
மனசு குளறுது மடிந்த மறவர்களே... - உம்மை
நெஞ்சம் நினைக்காத
நேரம் ஒன்றில்லை நேய வீரர்களே...
பூத்துக் கிடந்த மண்
வெந்து கிடக்குது பொறுக்க முடியலையே...
பொது இடத்தில் கூட நம் மனம் திறந்து
ஒரு சொல் சொல்ல முடியலையே...
புலம் பெயர் தமிழன்
வேர்வை எல்லாம் புல்லுக்கு பாய்கிறதே...
புண்ணாய்ப் போன எங்கள் மனசில்
வேல் தான் பாய்கிறதே...
காற்று வீசிடும் என்கிற நம்பிக்கை
காத்துக் கிடக்கின்றோம்...
காலத்தால் அழியாத உங்கள் கல்லறை
கண்டு பணிகின்றோம்...
என்றும் உங்கள் நினைவுகளுடன்...........

மலரே...


மொட்டென்னும் பெயரில்
சட்டென்று வளர்வாயடி...
ஒரு சில நாளில்
உன் முகம் திறப்பாயடி...
ஓராயிரம் பேர்
உன்னை ரசிப்பாரடி...
ஒருவனுக்காக நீ
காத்து இருப்பாயடி...
உன்னை நாடி வரும் - வண்டின்
ஓசை அறிவாயடி...
ஒத்திகை இல்லாமல்
உன்னைக் கொடுப்பாயடி...
தேடி வந்தவன்
தேவை முடியுமடி... - அவன்
திரும்ப நினைக்கையிலே -உன்
திரு முகம் வாடுமடி...
வாழ்ந்த ஒரு நாளில்
வள்ளலாய் வாழ்வாயடி...
இறந்தும் உன் உடல்
மண்ணுக்கிரையாகுமடி ...
மலரே இதுதான் வாழ்வின் நியதியடி...
மறந்தும் மறுபிறப்பு பிறக்க நினைக்காதே...

புண்ணாகும் மனசு...


சேற்றில் பிறந்த தாமரை,
புனிதமாகி அந்தப்
பெருமாளை சென்றடைகிறது...
சிப்பிக்குள் வளர்ந்த முத்து,
பெறுமதி மிக்கதாகி
பேரம் பேசப்படுகிறது...
மண்ணுக்குள் உருவான பொன்,
மலை போல் விலை பேசி
மதிப்புக் கொடுக்கப்படுகிறது...
மடியில் சுமந்த உன் அன்னை
பண்ணிய தவறுக்கு அறியாமல் பிறந்த -உன்
மனசு மட்டும் ஏன் புண்ணாக்கப்படுகிறது...
இந்த மனசறியா மானிடர்களால்.....

தண்டவாளங்கள்...


அங்கே பார்க்கிறாயா,
இருதண்டவாளங்களை...
அதிலே போகிறதே புகைவண்டி
அதுதான் - நம்
புனிதமான காதல் போல...
ரயில் பயணங்கள் ஒவ்வொன்றும் - நம்
இனிமையான நினைவுகள் போல...
ரயிலின் உரசல்கள் எல்லாம் - நம்
நெஞ்சம் தாங்கும் வலிகள் போல...
அதில் வரும் அதிர்வுகள் எல்லாம் - நம்
இதயங்களின் துடிப்புகள் போல...
இத்தண்டவாளங்கள்,
இறுதிவரை பிரியப்போவதில்லை
நம்மைப்போல...

கடன்...


நீ வைத்த நேசமும்-உனை
வருத்தி செய்த உதவியும்-என்
நெஞ்சில் காலத்தால் அழியாதவை-எனினும்
என்றும் கடனாளியாகவே நான்...

அன்பு...


நீ என்னை,
வெல்ல நினைத்தாலும் சரி,
கொல்ல நினைத்தாலும் சரி
உன் வார்த்தைகள் மட்டுமே
போதுமானது..

நீ அறிவாயா...


பூத்திருக்கும் காளானே...
காத்திருப்பாய் என்று தெரிந்தும்,
கதிரவன் மூச்சில்
கலைந்து காணாமல்
போகும் போது,
கலங்கிப் போகுதடி
உன் கார்முகிலின் மனசு...!!!