Saturday, October 13, 2012

திருவிழாவொன்றில்
தாயைத் தேடும்
குழந்தையைப் போல
உன்னைத் தேடி
நான் தொலைகின்றேன் அன்பே..
நெஞ்சுக் கூடு காலியாகி
எண்ணங்கள் தொலைந்துபோய்
இனம்புரியாத வலியொன்று
இதயத்தை துளைக்க
இங்கே நான் நடைபிணமாக...

காதல்..


வலியில் துடிக்கையில்
வரிகள் தேடுறேன்
வார்த்தையின்றி
நான் புலம்பித் தவிக்கின்றேன்
கண்கள் எழுதிய
காதல் கதையின்று
கலைந்து போனதால்
கண்ணீர் நதியிங்கு
இரவின் மடியிலே
உறக்கம் தொலைத்து நான்
நினைவு ஊஞ்சலில்
நித்தம் சுழல்கின்றேன்
எனக்கு நீயென
எழுதிய எழுத்தில்
எழுத்துப் பிழைகள்
எதற்கு வந்தது
காதல் படகொன்று
கவிழ்ந்து கொண்டதில்
கரையில் இருந்தும்
நான் தத்தளிக்கின்றேன்.
போடா என்று சொல்லிவிட்டு
புலம்புகின்றேன்
நானடா
நீ போனபின்பு பின்னால் நின்று
ஏங்குகின்றேன்
ஏனடா?
இதயத்தில் கதையெழுதி இறகாலே வருடிவெட்டு எங்கேயோ நீயும் போக இங்கிருந்து பாடுகின்றேன்...

கண்ணாடிக் குவளைக்குள்
மோதும் மீனாக
உன் நினைவுகளோடு
என் மோதல்..
மீன்தொட்டி இப்போது
பிடிக்காமல் போயிற்று
ஆயுள் கைதியான
அண்ணனை நினைவுபடுத்துவதால்..
உன் துப்பாக்கி முனையில் விரிவதால்
என் புன்னகையும் பொய்ச்சாயம் பூசுகிறது..
ஞாபகங்களாலும் காலங்களாலும்
கடக்க முடியாத நினைவாக எனக்குள் நீ..
மரணித்துப் போகும் காதலை விட
மௌனித்துப் போகும் காதலின் வலி பெரியது
எனக்கு நீ எவ்வளவு முக்கியம் என்று
உனக்கு மட்டுமேன் புரியமாட்டேன்குது??
நான் தேடிக் கொண்டிருக்கின்றேன்
நீ தொலைத்துவிட்ட
என் மீதான அன்பை..
இரவு வரும்போதெல்லாம்
தெரிகின்றது
நாளை விடியுமென்று..
விடியும் போதே
நினைக்கின்றது
மனம்
இரவு வருமேயென்று...

நெஞ்சை ஊடுருவும்
ஒரு மெல்லிய சோககீதம்
காற்றில் தவழ்கின்றது
ஆம்!!
என் தேவதையின்
மௌனத்தின் ஒலியாக
அது எங்கும் வியாபித்திருக்கின்றது...
நீ விலகிப்போனதால்
இறந்துகொண்டிருக்கின்றன
என் கனவுகள்..
நினைவுகளில் நீ..
நிஜத்தில் அவன்..
கனவுகளில் நான்...
எனக்காய் விழிநிரம்பி வழிகின்ற
நீரை தடுத்து விழுங்க
உன்னால் முடிந்தால் சொல்
நானும் என் காதலை
மறந்து போகின்றேன்..
சுடுமென்று தெரிந்தும்
நெருப்புகளை நீ
ஏன் கக்கிப் போகிறாய்??
உறவென்று சொல்லியிருந்தால்
ஒரு நாள்
நானும் மறந்திருப்பேன் உன்னை
நீ உயிரென்றல்லா
சொல்லி சென்றாய்
ஆதலால் துடிக்கிறேன்
நானிங்கு..நீயற்று...
எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்திற்கு
காரணமோ இல்லையோ
எனக்கும் உனக்குமான
எல்லா சண்டைக்கும்
அவைதான் காரணம்..