Sunday, January 31, 2010


குளியலறை

புதிதாய் பிறக்க

எனக்குள் நானே போராடும்

என் வீட்டு சின்ன மாளிகை



சந்தன சோப்பு

எத்தனை முறை தழுவும் போதும்

புத்துயிர் பெறுகிறேன்

ஒவ்வொரு முறையும்

உன்னைத் தடவுகையில்


ரவெல்

என் மீது படர்ந்திருந்த

பனித்துளிகள் சங்கமமாகின்றன

பூப்போன்ற உன் அணைப்பினிலே


போர்வை

உலகம் உறங்குகையில்

உனக்குள் ஒளிந்து கொள்கின்றேன்

ஒவ்வொரு நாளும் தவறாமல்


தலையணை


தலைசாய்த்து

தஞ்சம் புகும்

தாய்மடி நீதான்

Saturday, January 23, 2010

நீ போகிறாய்!!!


நீ போகிறாய்

பரிசாக....
நிறைய ஏமாற்றங்கள்
சகிக்கவே முடியாத துன்பங்கள்
மறக்க இயலாத துயரங்கள்
ஆறாத ஆழமான காயங்கள்

இவற்றுடன்
சின்னச் சின்ன சந்தோசங்கள்
எண்ணிடக்கூடிய பூரிப்பான நிமிடங்கள்
எல்லாவற்றையும் தந்துவிட்டு

என்ன சொல்லியும் கேட்காமல்
எவருக்கும் கட்டுப்படாமல்
நீ நகர்ந்து போகிறாய்

எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில்
அடுத்த சில கணங்களுக்காக காத்திருக்கிறோம்
புத்தாண்டு வருகிறதாம்...

அது இதுதானா.....


சில சமயங்களில் மென்மையாய்
மறுசமயத்தில் கடினமாய்
வரித்திட முடியாத சந்தோசத்தையும்
வாழ்வையே வெறுக்கும் வலியையும்
இருக்கும் போது இனித்து
இல்லாத போது வலித்து
எல்லாம் என்றும் தோன்றும்
எதுவும் இல்லை என்றும் சொல்லும்
உயிராய் இருக்கும்
உலகமே மறக்கும்
இனம்புரியாத
இன்னது தான் என்று
சொல்லமுடியாத
உணர்வு தானா
இந்தக் காதல் ????

Friday, January 22, 2010

அன்பில் ...........


தட்டி யாரிடமும்
தா என்று கேட்கமுடியாது
தந்ததை
எப்பவும் மறக்க முடியாது

கணக்கு வழக்கு
எனக்கு புரியலை
காரணம் சொல்லவும்
எனக்குத் தெரியலை

பெறும்போதெல்லாம்
உள்ளம் இனித்தது
கொடுக்கும் வழிதான்
தெரியாதிருந்தது

உதடு வேணும்னா
பொய்கள் சொல்லலாம்
உள்ளத்துக்கு மட்டும் தான்
சுகங்கள் தெரியும்

உலகுக்கு என்னை தெரியாது
உண்மையில் நான் ஓர்
கடன்காரி!!!!

Friday, January 08, 2010

என்னடா இது !!!!!!!!!!




அப்பப்பா !!!!!!!!!!
தாங்கமுடியலை
ஒண்ணுக்கு மேல ஒண்ணா
எத்தனை !!!!!
எவ்வளவு முயன்றும்
கட்டுப்படுத்தமுடியலை

எனக்கு வரும் கோவத்திற்கு
சுட்டு பொசுக்கிவிட தான் ஆசை
என்ன செய்ய முடிகின்றது இதனுடன்
இதற்கு பயந்து
வாழ்க்கை சக்கரம்
சுழலாமலா நிற்கின்றது

make up உம் மேல மேல
உடுப்பும் போட்டு
கடத்தி விட வேண்டியதுதான்
இன்னும் இருக்கின்ற
இரண்டு மாத குளிர்காலத்தையும்

காதலும் மாறுகின்றதா


கண்டதும் hello என்றான்
கவனியாத மாதிரி நகர்ந்தேன்
நீங்க ரொம்ப அழகாய் இருக்கிறீர்கள்
எதுவும் கேட்காதது போல நான்
உங்க phone no தாறியளா??
என்னடா வம்பு இது !!!
எரிச்சல் வந்தது
காலையில் வேலைக்கு
போகும் அவசரம் எனக்கு
இனியும் இது தொடர கூடாது
நல்ல வேளை பொட்டு இல்லை
மெல்லமாக சிரிச்சேன்
im already married என்றேன்
அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை
அசடு வழிகின்ற நிலை பாவமாக இருந்தது
அதன்பின் அவனை பார்த்ததாக நினைவு இல்லை
இரண்டு மாசம் போயிருக்கும்
பள்ளி தோழி ஒருத்தி ஒரே நச்சரிப்பு
பார்த்து சொல்லடி எப்பிடி என்ர ஆள் எண்டு
நானும் யாரையோ மனசில வைச்சு
முடிவெடுக்க கேட்கிறாள் எண்டு தான் நினைச்சேன்
KFC இற்கு வா ஞாயிற்று கிழமை 4 மணிக்கு என்றாள்
போனதும் திகைத்தேன்
கைகள் இணைத்தபடி அவளும் அந்த அவனும்
எனக்கு தான் சங்கடம்
அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை
அவள்தான் அறிமுகம் செய்தாள்
hello என்றான் எப்பவும் கண்டிராத தோரணையில்
அவர்கள் நெருக்கம் என்னையும் சகஜ நிலைக்கு இழுத்து வந்தது
பேச்சுவாக்கில்
சொல்லவே இல்லை எவ்வளவு நாளாய்
இது உங்களிடையே என்றேன்
அரை வருஷம் முடியுதடி என்றாள்
பகீர் என்றது எனக்கு
சுரீர் என்ற வலி தோன்றி மறைந்தது
அரைமணி நேரம் அதன்பின்பும் இருந்து
ஏதேதோ பேசினோம்
எந்தன் மனதில் மட்டும்
என்னவனும் இப்டித்தானோ
இன்னொரு பெண்ணிடம் அசடு வழிவான்
என்ற கவலை இருந்துகொண்டேயிருந்தது
காதலும் மாறுகின்றதா
காலத்தின் போக்கிற்கு ஏற்ப ??????????????

Friday, December 11, 2009

எனக்குள் நானே ...........


என்னில் நானே
தோற்றுப் போன போது
எனக்குள் நானே
தொலைந்து போனேன்
மீட்கப்பட முடியாத அளவிற்கு
நொறுங்கிய நிமிடங்களில்
இழந்து போன நிம்மதியை
தேடி நிரப்பிவிட
ஆசைப்படுகிறது மனம்
எங்கோ பிரிந்து
என்னை விட்டுப் போன சந்தோசத்தை
உன் இதயம் திருப்பி கொடுக்குமா???
ஏக்கம் பன்மடங்கு
என்னுள் இருந்தபோதும்
இன்னும் வெற்றிடமாகவே
இடைவெளிகள் எனக்குள் ..............

Sunday, November 29, 2009

கார்த்திகை மாதம் இது




வானத்தாயின் அரவணைப்பில்
சில்லிட்டு போயிருக்கிறாள் பூமித்தாய்
இடம்பெயர்ந்து இன்னல் பல அனுபவித்த
எம்மவர்கள் மீள வந்திருந்து
ஏக்க பெருமூச்சு விடுகிறார்கள்
தரிசாய் கிடக்கும் நிலங்களை பார்த்து

அங்கொன்றும் இங்கொன்றுமாக
தெரிகின்ற ஆள்கருப்பு
ஆட்களில்லாத வீடுகளில்
அட்டகாசம் செய்யும் ஆனைகள்
கால்கள் இரண்டுக்கும் நாலுக்கும்
பயந்து கூட்டம் கூட்டமாய்
கூடி வாழுது எங்களினம்.

அன்றைய நாட்களை
அசைபோடும் மனசுக்கு எல்லாம்
கனவாய் இருக்கிற வாழ்க்கை

செம்மண் கொண்ட எங்களூரில்
சேறில் கூட பூக்கள் பூக்கும் காலமிது
விளக்குகள் கொளுத்தி
விழாகோலம் பூணும் நாட்களிவை
உயிர்வாழ்தலிட்கான பயத்தில்
மையிருட்டுக்கள் வெறுமையாகவே
எங்கள் கல்லறை தெய்வங்கள் ...............

Saturday, October 17, 2009

காதல் நினைவுகள்!


தீராத காதல்
தரைமீது அலைக்கு
தட்டித் தரை கழித்தாலும்
கரையை வந்து பார்ப்பதற்கு
அலைகள் மறப்பதில்லை
கரையும் மௌனித்தது
கடைசிவரை நிறைவேறா
காதல் இதுவென்று
அலையது சுமந்துநின்ற
ஆசைக் காதலது
கைகூடாவிட்டாலும்
களித்திருந்தது தன்
காதலியைத் தினம் காண்பதனால்

கரையும்....
காதலதை மனம்சுமக்க
காதலரைத் தான் தாங்கி
களிப்படைந்தது

கரையின் மடியில்
கடலலையின் அரவணைப்பில்
கைகோர்த்து நாம் நடந்த
காலடித் தடம் தேடுகின்றேன்
கரையைத் தொடும் அலைகள்
களவாடிச் சென்றன அவற்றை
கரையைப் போல் நானிருக்க
தழுவிச் செல்கின்றன அலையாக
உன்நினைவுகள்!

Friday, October 16, 2009

என் கவிதை


இரவின் நிசப்தத்தில்

விழிகள் மூட மறுத்ததால்

எழுதத் துடிக்கிறது

எந்தன் பேனா


கவி ஒன்று வரும் என்று

கைகள் கிறுக்கிய போது

எழுதப்பட்டது எல்லாம்

உந்தன் பெயர் மட்டுமே


வெண்ணிலவையும்

மின்னும் நட்சத்திரங்களையும்

பரந்து விரிந்த கறுத்த வானத்தையும்

பார்த்தபடி காத்திருக்கிறேன்

உந்தன் வருகைக்காக

Thursday, October 15, 2009

காதலைத் தெரிந்துகொள்

உன்னை பிடிக்கும் என்று
ஓராயிரம் காரணம் சொன்னேன்
ஒற்றைச் சொல்லில்
பிடிக்கலை என்று ஏன் சொன்னாய்
ஒரு காரணமும் சொல்லாமல்

சுற்றிய தெருக்களும்
பேசிய விழிகளும்
தூங்காத இரவுகளும்
பேசாத வார்த்தைகளும்
அறியும் என் காதலின் ஆழத்தை

என்றோ ஒருநாள்
உன்வாழ்விலும் காதல் வரும்
அப்போது அதன் சோகங்களை
நீ உணராவிட்டாலும்
சந்தோசங்களயாவது தெரிந்துகொள்
வாழ்க்கை முழுமை பெறட்டும்!

Monday, October 12, 2009

நீ வருவாய் என!


இற்றைவரை தெரியவில்லை
எப்போது உன் வருகையென
குமுறி அடங்கும் விம்மல்களை
இதயச் சுவரது தாங்காது
வெளியில் வீசுகிறது
உஷ்ணமான பெருமூச்சுக்களாக
இதயத்துடன் பேசுகிறேன்
அருகில் நீ இருப்பதாக


பகிர்ந்துகொள்ளநீ வருவாய் என
பல நாளாய் என்னுள்
சேர்த்துவைத்த
சின்னச் சின்ன சந்தோசங்களும்
மனதை அரிக்கும் சோகங்களும்
எவரும் திறவாப் புத்தகமாய்
இறைந்து கிடக்கிறது
மனம் நிறைய!

Saturday, October 10, 2009

இரங்காத காலம்!



காத்திருந்தாள்
அவன் தருவானென்று,
கனிவான பார்வை;
கண்களால் ஒரு செய்தி;
காற்றினில் ஒரு முத்தம்;
கடைசிவரை
அவன்கரையவில்லை
கடந்துசென்றது
காலம் மட்டும்!
மறைந்துவிட்டாள்
அவளும் எங்கோ!


தேடுகிறான்
அவள் தடத்தை
நடந்துசென்ற
பாதைகளில்!
அவள் விழியை
கடந்துசெல்லும்
முகங்களில்!
துணிந்துவிட்டான்
காதருகில் மெல்ல
என் தேவதை நீ
என்றுகூட சொல்வதற்கு!
கரையவில்லை
காலம் மட்டும்
அடித்துச் சென்ற அவளை
திருப்பித் தருவதற்கு!

Sunday, October 04, 2009

விதியால் தொலைந்த அழகு



உன்னை பார்க்காமல்
ஓடிப்போயிற்று ஈராண்டு
கடிகார முள்ளை அடிக்கடி
பார்த்திருக்கேன்
ஒவ்வொரு வினாடி
நகர்தலிட்கும் காத்திருக்கேன்

போய்விட்ட நாட்களில்
நினைத்து பார்க்கலை
நீ இப்படி மாறியிருப்பாய் என்று
ஒட்டிய கன்னமும்
ஓரளவு லீக்கல் விழுந்த பற்களும்
உச்சி வரை முடி நரைச்சு
என்ன நடந்தது??

நன்றாகத்தானே இருந்தாய்
நான் இங்கு வரும்பொழுது
காலம் பறித்ததுவோ??
கவலை தான் தின்றதுவோ ??
அழகான அம்மா நீ
அவசரமாய் மாறியதேன்??

உன் படம் பார்த்த பையன்
யாரிந்த கிழவி என்று
தயங்காமல் கேட்கின்றான்
என்ன பதில் நான் சொல்ல??

விம்மல் எழுகையிலே
விரல்கள் தழுவுது
உந்தன் புகைப்படத்தை
கணனியிலே!

கால நகர்வின்
கடைசி நிமிடங்களையும்
வெறுத்து சபிக்கின்றேன்
இறந்து கொண்டிருக்கும்
உன் இளமையினை
மீட்க தெரியாமல்!

Saturday, October 03, 2009

முரண்நிலை



அலையென ஆர்ப்பரிக்கும்
மனங்களின் மத்தியில்
மௌனங்களின் நிசப்தத்தால்
மயான அமைதி!

சோகங்களின் மிகுதியால்
சுருண்டுவிட்ட இதயங்களின்
நம்பிக்கைக் கீற்றாக
உதட்டில்மட்டும் புன்னகைக்கோடு!

சரவெடிச் சிரிப்புக்கள்
வானைப் பிளக்க
சத்தமின்றிக் கசிகிறது
இரத்தக்கண்ணீர்!

சந்தோசக் களிப்பில்
ஊர்கள் மிதக்க
சத்தியம் தப்பிய
சாவுகள் நிரம்பிவழிகிறது!

Sunday, September 27, 2009

சாட்சி!



முகாரி இசைக்கின்றன
விடுவிக்கப்பட்ட நிலத்தில்
வீதிகளும் வீடுகளும்
தாம் தாங்கியவரைக்
காணாது!

சல்லடைபோடுகின்றன
வன்னிக்காடுகளிலும்
வயல்வெட்டைகளிலும்
தம்மை வளர்த்தோரின்
எச்சம்தேடிகால்நடைகள்!

துணைநிற்கின்றன வேலியில்
வேர்கள் அறுக்கப்பட்டு
கிளைகள் தறிக்கப்பட்ட
கம்பிக்கட்டைகள்
கதியிழந்த எம்
உறவுகளுக்கு சாட்சியாக!

Saturday, September 26, 2009

கலையாத கனவுகள்


எண்ணச் சுழற்சியில்
சிக்கிக் கிடக்கிறது
இறந்தகாலத்தில் எழுந்தவினாக்கள்!

இன்னும் கோர்த்துமுடியவில்லை
தொண்டைக்குழிவரை
எம்பிக்குதிக்கும்
நிகழ்காலத்தின் வியாக்கியானங்கள்!

வாழ்க்கைக்கும் வார்த்தைக்குமிடையே
முயன்று முயன்று
மனம் தோற்கிறது சமரசங்கள்!

அழியாமலே
கருங்கல்சிற்பமாகியது
வாழ்வின் மீதான நம்பிக்கை!

கலையாத கனவாக
வண்ண வண்ண கோலத்தில்வந்து
என்னை மகிழ்விக்கும்எதிர்காலம்!

வழிமீது விழிவைத்து


உன் வருகையை பார்த்து

என் விழிகள் பூத்து போகின்றன

உன் அருகாமையை எண்ணி எண்ணி

என் இரவுகள் தவித்து போகின்றன

உன் மடியை தேடித் தேடி

என் முடிகள் நரைத்துப் போகின்றன

என் தவிப்புகள் புரிந்தும் ஏன் தாமதிக்கின்றாய்

என தெரியாமல் உன் வழியை

மீண்டும் ஒரு தடவை

உற்றுப் பார்க்கிறேன்!!!!

ஆசைப்படுகின்றேன் !!!




ஆசைப்படுகின்றேன்......

உன் அருகில் இருப்பதற்கு..
ஆனால் முடியவில்லை!

உனக்கு அள்ளிக் கொடுப்பதற்கு
அகத்தில் ஒன்றும் இல்லை!

உன்னை கட்டி அணைப்பதற்கு!!
கைகள் எட்டவில்லை!

எல்லாம் இருந்தும்
என்னை வெறுக்கிறேன்

இயலாமையின் காரணத்தால்....


எனது இதயம் புண்ணாய் போகின்றது
உனது உணர்வலைகளை எண்ணி

பறந்து போகின்றன எனது சோதனைகள்
உனது மன வேதனைகளை பார்த்து

உறையாமல் ஓடுகின்றது எனது குருதி
உனது மன உறுதிகளை பார்த்து

ஆசைப்படுகின்றேன்... நான்
உன் பாதணிகளாக இருக்கவாவது..
உனது கனவுகளை நோக்கிய பயணத்தில்!!!!

ஆசைப்படுவது தப்பா?

Friday, September 25, 2009

முடியாத இரவுகள்


நீண்ட இரவு
கொட்டும் பனித்துகள்
கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்
தேய்ந்துபோன நிலா
மெல்லிய குளிர்காற்று

சில்லிட்ட மெத்தையில்
தூங்க மறுக்கும் விழிகளுடன்
போராடியபடி நான்

நினைவுகளின் சுழற்சியில்
கடந்தகாலங்கள் களிப்பூட்டும்
ஏக்க பெருமூச்சுக்களாய் மட்டும்

எல்லாம் கனவோ என்கின்ற மாதிரி
கடந்து போகின்ற நிகழ்காலம்

எதிர்காலம் பற்றியஎவ்வித தீர்மானமும்
இன்னும் இல்லாத போதிலும்
கண்ணயர்ந்து போகின்றேன்
நாளை பார்க்கலாம் என்ற நம்பிக்கையுடன்
நனைந்து கிடக்கும் என் தலையணையில்