Wednesday, March 09, 2011

மன்னிப்பாயா

மன்னிப்பாயா ??
என்னைச் சுமந்தபடி
சுவரோரமாய் நீ
உன்னைச் சுமந்தபடி
மணமேடையில் நான்
காலங்கள் கடந்தது
கமலியின்
கல்யாண நாளில்
ஹாய் என்கிறாய்
அன்று கழுத்தைக் கொடுத்த நான்
இன்றுனக்கு ஹாய்
சொல்லக் கூட முடியாமல்
கட்டுபட்டு நிற்கின்றேன்
மன்னிப்பாயா

மன்னிப்பாயா
என கேட்கிறேன் நான்
அது கேட்க இவளுக்கு மனசிருக்கா
என நினைக்கிறாய் நீ

மன்னிப்பு கேட்பது ஈசி
மன்னித்து விடுவது கஷ்டம்
அட்வைஸ் விடுவது ஈசி
அட்வைஸ் கேட்பது கஷ்டம்

காதல் அழிவதில்லை

அன்று போலவே இன்றும்
அவள் வீட்டு வாசலில் நான்
கண்ணில் அதே காதல்
நெஞ்சில் அதே உருக்கம்
மனதில் அதே ஏக்கம்
என்னை வரவேற்கிறாள் அவள்
தன் பேரக் குழந்தையுடன்
காதல் அழிவதில்லை என்பதை
அவள் கண்ணில் தான் நான்
வாசித்தேன் யாசித்தேன்

Tuesday, February 08, 2011

எங்கே போனார்கள்

எதிரே பார்த்தது ரோஜா
எதையோ தேடியபடி நிலா
என்னைப் போலவே அவளும்
இதயத்தை தொலைத்த அவ்
இருவரையும் தேடுகிறாளா
கேள்விக்குறியுடன்
மெல்ல சிரித்தது

திரும்பிப் பார்த்தது நிலா
அழகான ரோஜாவின்
அர்த்தமற்ற வாடல்
அவர்களுக்கான ஏக்கம்
தான் என புரிந்துகொண்டது
எங்கள் இருவரையும் இப்படி
ஏங்க விட்டுவிட்டு
எங்கே போனார்கள்
ஓடத் தொடங்கிற்று

கடற்கரை மணலில்
ஹனிமூனில் அவர்கள்
நாணம் கொண்டு நகர்ந்தது நிலா
மறுநாள் விரைந்தது
மகிழ்வான செய்தி சொல்ல
ரோஜாவைத் தேடி
நிலா முகம் கண்டு
நிம்மதியடைந்தது ரோஜா
இதழ்கள் உதிர்த்து
இன்புற்று கொண்டது

Monday, February 07, 2011

காதல் ஓவியம்

ஆதவன் அஸ்தமிக்க
அலைகடல் ஆர்ப்பரிக்க
வெண்மேகம் விலகிஓட
வெள்ளியெல்லாம் பூத்திருக்க
தேடத் தொடங்கிற்று நிலா
அவன் ஆருயிர் காதலியை

அல்லும் பகலும் என
தேடித் திரிந்த நிலா
இருவாரம் ஆனதும்
இத்துப் போயிற்று
இனியவளைக் காணாமல்

காத்திருந்த காதலனின்
காதல் ஓவியம்
களை இழந்து போனதால்
கருமேகம் சூழ்ந்து கொண்டது
கடலலை கூட
அமைதியாய் ஆனது

இவ்வுயிர்க் காதலன்
இதயத் துடிப்பைப் போல
இடியும் இடித்தது
இழப்பினை தாங்காத
இவன் அழுகையோடு
வானத்தின் கண்ணீரும்
சங்கமமாகியது

Friday, February 04, 2011

தவிப்பு

என் நிம்மதியை தொலைத்த
நம்பிக்கையை சிதைத்த
உன்மீது
கோவிக்க முடியாமலும்
மன்னிக்க தெரியாமலும்
சுழலும் இப்பொழுதில்
என்னை எப்படி
நான் புரிந்துகொள்வது
விடைகளற்ற வினாவாக
உன்னை பற்றிய
என் நினைவுகள்
தொடர்கின்றது

Sunday, January 30, 2011

வாழ்க பல்லாண்டு

கொஞ்சம் கோபம்
சின்ன பொறாமை
மெல்லிய கவலை
முழுசாய் நிம்மதி
மூளையில் சந்தோசம்
என உணர்வுகளின்
குழப்பத்தில்
உன் கல்யாண
வீட்டில் நான்

Monday, October 18, 2010

கடைசி சந்திப்பு

உனதும் எனதுமான சந்திப்பின்
இறுதினாளாக இருக்க வேண்டுமென
இருவரும் ஒருமித்து வேண்டிய நாள்
உன்னால் நானும் என்னால் நீயும்
பகிர்ந்துகொண்ட இன்பங்களை மறந்து
பட்ட கஷ்டங்களை மட்டுமே
நினைவுபடுத்திய நாள்
மெல்லிய வெண்பனியில்
ஏறிட்டு முகத்தினை பார்க்காது
பாதச் சுவடுகளை பார்த்தபடி
பேசிக்கொண்ட நாள்
அறிமுகமான நாளிலிருந்து
அருகிலிருக்க விரும்பிய இதயம்
எப்போது விடைபெறலாம் என
ஏங்கிய நாள்
இதயங்கள் இடம்மாறி
எங்கள் காதல் முறிந்த
கடைசி சந்திப்பு நடந்த நாள்

Saturday, October 02, 2010

இல்லாத போது..

1.பத்து பொருத்தம் பார்த்து
படலமாய் பெண் பார்க்க வந்து
ஊரெல்லாம் விசாரித்து
வந்தவர்கள்
உதறிச் சென்றார்கள் என்னை
சொத்து பொருத்தம்
ஒத்து போகலையாம்

2.பூக்களற்ற தலை
பொட்டில்லா நெற்றி
வர்ணமில்லா புடவை என
அத்தனையும் இல்லாத
அவளை அபகரிக்க
துடிக்கின்றது அரக்கர் கூட்டம்

3.முழுதாய் கலையாத தூக்கம்
அதட்டி எழுப்பும் அலாரம்
இயந்திரமாய் பல்துலக்கி
இரண்டு நிமிட குளியல் போட்டு
காலை கோப்பிக்கு கடிக்க
நேரமின்றி வேலைக்கு
செல்கையிலே வருகிறது
வீட்டு நினைவு ...
கடிகாரம்
நிற்க நேரமில்லை
ஓடணும் நான்

திருமணம்

மனங்களை இணைக்க
வரும் மணம்

மழை
பூமிக்கான பூக்கள்
தூவியது வானம்

வானவில்
வண்ணங்கள் வரைந்த
வான ஓவியம்

விதவை
மலர்கள் சூட
மலருக்கு தடை

Sunday, September 05, 2010

வாழ்த்துக்கள்

என் அருகில் நீ...
சொல்லேன்டா என
என் மனமும்
சொல்லிவிடுடா
என உன் கண்களும்
சண்டை போட்டுக்கொள்ள
ஏதோ தடுத்தது

எத்தனை தடவை
எத்தனை விதமாய்
ஒத்திகை பார்த்தேன்
எப்படி என் அத்தனை
துணிவையும் கொள்ளை
கொண்டாய்
உன் ஒற்றை பார்வையால்

சொல்லாத காதல்
இதயத்தை நொறுக்க
சோககீதங்கள்
நெஞ்சிற்குள் ஒலிக்க
வந்திருக்கிறேன்
இன்று நான்
மணவாழ்த்துக்கள் கூற
உன்னிடத்தில்.

Wednesday, May 05, 2010

எனக்கு தெரியலையே ..


பார்த்து பார்த்து எல்லாம் செய்தாய் நீ
பார்க்கவே பிடிக்கவில்லை என்கிறாள் அவள்
உயிரே நீதான் என்கிறாய் நீ
உன்னை காணவே சகிக்கவில்லை என்கிறாள் அவள்

வீதி வீதியாய் அலைந்தாய் நீ
விலகிப்போ என்று கத்துகிறாள் அவள்

பேசவே துடித்தாய் நீ
பேச்சுக்கே இடமில்லை என்கிறாள் அவள்

ஒற்றை பார்வைக்கு தவமிருந்தாய் நீ
ஒருதடவை கூட தரவில்லை கனிவான பார்வை அவள்

கரைஞ்சு கரைஞ்சு காதலித்தாய் நீ
காதலிக்கவே இல்லை என்று சத்தியம் செய்கின்றாள் அவள்

என்னடி செய்வேன் என்று புலம்புகிறாய் நீ
எதுவுமே நடக்காத மாதிரி வாழ்கின்றாள் அவள்

இதுதான் காதலா இதுவும் காதலா
புரியாதது நீயா இல்லை அவளா
புரியவில்லை எனக்கு இப்போதும் கூட

உனக்காகவே




ஓ பெண்ணே ..
அலைபோல மோதும்
நினைவுகளை அடக்கம் செய்துவிடு
அருவிபோல ஓடும்
கண்ணீரை துடைத்தெறிந்துவிடு
உறையும் குருதியின்
ஓட்டத்தை துரிதப்படுத்திவிடு
கனக்கின்ற இதயத்தின்
பாரச் சுமைகளை இறக்கிவிடு

உயிருள்ளவரை ..
ஓடத் தயாராக இரு
வாழ்க்கை உனக்கானது
வாழவேண்டும் நீ - தொலைந்து போன
வசந்தங்களை தேடி
மீண்டும் தொடரட்டும் உன் பயணம்
மலருட்டும் இங்கு
புதியதொரு வாழ்வு உனக்காகவே

உனக்காகவே

Monday, April 12, 2010

தடை ..


இரவுக்கும் பகலுக்கும்
யுத்தம் நடக்கும்
காலைப் பொழுது
குளிர்மை நீங்கா
அதிகாலை காற்று
தூக்கம் கலையாத
முகங்களுடன்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
காலை மனிதர்கள்

பறந்து வந்தன
ஜோடிக் குருவிகள்
பார்வைகளில்
காதல் மின்ன
படபடவென்று
பேசிக் கொண்டன
அலகால தலைகோத
கட்டிக்கொண்டது
மற்றக்குருவி

வெட்கப்பட்டு திரும்புகையில்
பறந்து வந்தது
இன்னோர் குருவி
உலகம் மறந்து
ஒன்றித்து நின்றவை
ஒருவித திகிலுடன்
விலகிப் போயின
வில்லன் குருவி
பக்கத்தில் வர
விரைந்து பறந்தது
ஜோடியில் ஒன்று

ஏக்கத்தோடு மற்ற குருவி
என்னை பார்க்கையில்
எனக்கும் மெல்ல அழுகை வந்தது
காதலில் தடை
காக்கைக்கும் வருமோ?

Saturday, April 10, 2010


பெண் என்றால் ......

என் முன்னாலேயே
இன்னொரு பெண்ணை
சப்பை பிகருடா என்று
சலிச்சு கொண்டவன்
என் போட்டோ ஒன்றுக்கு
fb யில் பால்ய நண்பன்
ஏதோ எழுதி இருந்ததை
பார்த்து எரிந்து விழுகிறான்
நான் தனக்கு மட்டுமே தானாம்..


நெற்றிக்கு குங்குமம்
காலுக்கு மெட்டி
கழுத்துக்கு தாலி
என்று சம்பிரதாயங்களில்
வேலி போட்டு
பாதுகாத்து கொள்கிறார்கள்
மனைவியை
மனசு இருப்பதை
அறியாத மனிதர்கள்

Sunday, March 07, 2010

தப்புகணக்கு


ஏங்க அவங்களுக்கு அறிவில்லையா? அப்படியெண்டா முதலே call பண்ணியிருக்கலாம் தானே? இப்போதான் வேலையால வாறியள். இனி திரும்ப போறதெண்டா சும்மாவா?


"என்னடா செய்ய. நிறைய things போல. அதுதான் கேட்கினம். " என்னை சமாதான படுத்தும் தோரணையில் என்னவர்.
அப்போ டாக்ஸி பிடிக்கிறதுதானே? புறுபுறுத்தபடியே பையனை தூக்கிக்கொண்டு றூமுக்குள் போய்விட்டேன் நான்.
" உனக்கு தெரியும் தானே. அவயளிண்ட பாடும் இப்ப கொஞ்சம் இறுக்கம்" என்று சொல்லியபடியே இறங்கிப் போய்விட்டார் இவர்.

பெரிசா எதுவுமில்லை. ஜேர்மனி போயிருந்த ஜெயாக்கா திரும்பி வாறா. அதுதான் உதவிக்கு இவரை ஸ்டேஷன் இற்கு வரச் சொல்லி கூப்பிட்டவ. இவரிட்டை என்ன கார் இருக்குதே? அவரு திரும்பி வந்த போது கூட என் கோவம் குறையவில்லை.

மதியம் வீடை நிற்பியளோ எண்டு கேட்டு ஜெயாக்கா call எடுத்தா.

"ஓமக்கா. வாங்க நேரில கதைப்பம்" எண்டு வச்சுட்டன்.

இவர் வந்த பிறகு தான் அவையளும் வந்திச்சினம். கை நிறைய bag .
பையனுக்கு வோல்க்கர், பொண்ணுக்கு அவளின்ர வயசு சைக்கிள், இவருக்கு ஒரு ஜக்கட், சண்ட்விச் செய்யுற ஒரு மெசின்.,எனக்கு மொடலான ஒரு சப்பாத்து என்று

வாங்கணும் என்று பேச்சுவாக்கில் நான் சொன்னது அடங்கலாக நிறையவே அக்கறையோட வாங்கி வந்திருந்தா ஜெயாக்கா.


அவ ஒவ்வொன்றாக எடுத்து வெளியில் வைக்க என்னவர் நிமிர்ந்து என்னை பார்த்தார்.

அந்த விழிகளை ஏறிடும் துணிவின்றி கிச்சினிற்குள் புகுந்தேன் தேனீர் தயாரிக்கும் சாட்டில்.

Saturday, March 06, 2010

காதலுடன்



மூளை சொல்லியும் கேட்காமல்
என் மனது உன் பின்னால் வருகிறது
இருபார்வை சங்கமித்து
இதயங்கள் ஒன்றாகி வருவது ..
அதுதானே காதல்
தெரிந்தும் எதற்கு
இத்தனை முரண்டு எனக்குள்

கருக தொடங்கும் எந்தன் காதல்
துளிர்த்துவிடுகின்றது உந்தன்
ஒற்றை பார்வையில்
அடுக்கடுக்காய் விளக்கம் சொல்லி
விலகிப் போய்விட
உன் செயல்களுக்கு அர்த்தம்
நான் தேடுகையில்
ஒருவார்த்தை சொல்லி என்னை
உசுப்பி நீ போகிறாய்

மீளவும் முடியாமல்
மீட்கவும் முடியாமல்
நானிங்கு போராட
வாழவும் இயலாமல்
சாகவும் துணியாமல்
என் மனதிங்கு தள்ளாட
என்ன செய்வேனடா நான்
உந்தன் மீதான
ஒருதலைக் காதலுடன்

Wednesday, March 03, 2010

நாங்கள் இல்லாமல்


நானும் நீங்களுமாய்
வாழ்ந்த தெருக்களில்
உங்கள் பாதச்சுவடுகளை
தேடி போனேன்
கணக்கின்றி வளர்ந்திருந்தது
தகரைகள் எங்கள் வீதியில்
எட்டி பிடுங்கிய புளியமரம்
எறிந்து பிடுங்கும் அளவு
உயர்ந்து இருக்க
தோடு போட்ட கொன்றை மரம்
பூத்து குலுங்க
வாசல் வேப்பமரத்து
அந்த ஜோடி காக்கைகள்
நேரம் தவறாமல் வந்து அழைப்புவிட
பனங்காய் சாப்பிட அந்த சிவப்பி மாடு
இப்பவும் வேலியால் வர என்று
எதுவும் மாறாமல் இருந்தது
நாங்கள் இல்லாத எங்கள் வீட்டிலே

Tuesday, March 02, 2010

கனவுகளில் காண்கின்றேன் ...


ராசாத்தி நீ என்னை ஒரு நாலரை போல எழுப்பிவிடு. வாழையளுக்கும் மரவள்ளிக்கும் ஒருக்கா இறைப்பம். வரம்பு கட்டினது நாரி எல்லாம் விண் விண் எண்டு வலிக்குது.

'சரி சரி நீங்க படுங்கோ. எழுப்புறன்.' அவள் கூடை பின்னுவதிலேயே கவனமாய் இருந்தாள். என்ன அலுப்பு .........

ராசாத்தி அடிக்கடி என்னால சைக்கிள் ஓடமுடியாது. தேவையான எல்லாத்தையும் இப்பவே மருமோன்மாரிட்ட சொல்லிவிட்டுடு.
எங்கயோ தூரத்தில் இருந்தபடி அவள் என் குரலுக்கு 'ஓம் ஓம்' எண்டு கேட்டது.
என்ர காலையே சுத்தி சுத்தி நிண்டவள். இப்ப கண்ணிலேயே படுறாள் இல்ல. இருக்காதே பின்ன. எனக்கே எவ்வளவு சந்தோசமாய் இருக்கு. நாலு பொண்ணுகளும் வந்து நிற்குதுகள். மனசு மாதிரி வீடும் நிறைஞ்சு போச்சு.
நாளைக்கு பெரியவளின்ர பையனுக்கு கொழுக்கட்டை கொட்டுவம் எண்டு தான் அடுக்கெடுப்பு நடக்குது. இதில அடுத்தவளுக்கு வாற மாசம் பெறுமாதம். மூன்றாவதும் கட்டிகொடுத்ததுக்கு இப்பதான் முதல்தடவையாக வந்திருக்கிறாள். கடைக்குட்டி கம்பஸ் சாப்பாடு சரியில்லை போல வாடி வதங்கி வந்திருக்கு பிள்ளை.
அவளுக்கு எங்கை நேரம். ஆளாளுக்கு தேவையானது எல்லாத்துக்கும் பறந்துகொண்டிருக்கையில் காலமை என்ர தேத்தண்ணியை கூட கொடுக்கேல்ல. கடைக்குட்டியை கேட்டுத்தான் குடிச்சன்.
இப்ப அவளுக்கு மத்தியான சமையல் அவசரம். எத்தனை நாளைக்கு பிறகு இப்டி ஒரு கலகலப்பு வீட்டில.
என்ர பொண்ணுகள் எல்லாம் கொடுத்து வச்சதுகள். வந்த மாப்பிள்ளைமார் தங்கம். தங்கட பாட்டில எல்லா அலுவலும் நடக்குது.
இப்படியே எல்லோரும் சந்தோசமாக இருக்கோணும் எண்டு உள்மனசு நினைக்கயிலயே கண்ணும் கலங்கி போகுது.

ராசாத்தி வயிறு புகையுது ஏதாவது சாப்பிட தாறியா... எங்கை இவள்? ராசாத்தி ராசாத்தி ....

கூடை நழுவி இருக்க சுவரில் சாய்ந்தபடி தூங்கியிருந்தாள் என் ராசாத்தி. மழைக்கு அவள் வைத்த ஒழுக்குசட்டி நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. தூக்கணாங்குருவி இரண்டு குடும்ப போட்டோவை திரும்ப திரும்ப கொத்தியபடி இருந்தது.

Tuesday, February 16, 2010

விடுபட முடியாமல் ....


இருள் அகலாத காலை பொழுதினில்
எனக்குள் இருந்த உறக்கம் தொலைந்தது
இறுக்க மூடிய போர்வை விலக்கி
கண்களை கசக்கி கடிகாரம் தேடினேன்
பிள்ளையார் கோவிலின் பெரியமணி
மூன்று தடவைகள் அடித்து ஓய்ந்தது
எங்கோ தொலைவில் ஒற்றைக் குயில்
கூவி இசைப்பது காதில் ஒலித்தது
வேப்பமரத்து காக்கா விடியவே
வந்து தன் வரவு பகிர்ந்தது
மெல்ல ரெலிபோன் சிணுங்கும் சத்தம்
மிச்சம் இருந்த சோம்பலை பறித்தது
எட்டி மெல்ல எடுத்த போது
என்னவள் குரல் இதமாய் இருந்தது
"செல்லம்" என்ற சிணுங்கல் சத்தம்
சிட்டாய் எந்தன் நெஞ்சை நிறைத்தது
எதிர் இருக்கைகாரன் எழுந்து செல்ல
மெல்ல சொன்னான் பாதோம் (மன்னிக்கவும்)என்று
கண்கள் திறந்து வெளியே
பார்க்கையில் கடந்திருந்தேன்
இறங்கும் இடத்தை ....