Saturday, February 13, 2010

வலி


அதிகாலை தொலைந்தும் தூக்கம் மீராவை நெருங்காது துன்புறுத்திக் கொண்டிருந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. எப்போதுமே அடிமனதில் இருக்கும் வலிதான் அது. இன்று அதிலிருந்து அவளால் மீள முடியவில்லை.
அவர்கள் வீட்டில் தான் லட்சுமி மாமி இடம்பெயர்ந்து வந்து இரண்டு வருடங்களாக இருக்கிறாள். அவள் தனது மூன்று வயது நிலாவைக் கண்டித்துக் கூறிக்கொண்டிருந்தாள். நிலா எதுவும் பிழை செய்துவிடவில்லை. எல்லா சிறுமிகள் போல அவளும் இன்று மதியம் வீட்டுக்கு வந்த தனது ஒன்றுவிட்ட குட்டித்தங்கையை தூக்க ஆசைப்பட்டாள். அதற்கு தான் மாமி மீராவைக் இழுத்து விவாதித்துக் கொண்டிருந்தாள். நிலா குழந்தைகளை நீ ஒரு போதும் தூக்க கூடாது. வானதியக்காவை அவ குட்டி பாப்பாவாக இருக்கும் போது மீராக்கா தூக்கி விழுத்தியதில் தான் அவ கதைக்க முடியாமல் கையால் கதைக்கிறா. நீ ஒரு குட்டி பாப்பாவையும் தூக்கக் கூடாது. ஓகேயா!

நிலாவிற்கு அவள் சொன்னது புரிந்ததோ இல்லையோ தலையை ஆட்டியபடி கேட்டுக்கொண்டிருந்தாள்.
ஆனால் வீட்டிற்கு பின் நின்று பூப்பறித்துக் கொண்டிருந்த மீராவின் தலையில் யாரோ பலமாக சம்மட்டியால் அடித்த உணர்வு. தாங்கமுடியவில்லை. அப்படியே யாரும் அறியாமல் தன் அறைக்குள் நுழைந்தவளுக்கு அழுகையை அடக்கமுடியவில்லை.
ஐந்து வயதில் ஆசைப்பட்டு ஆறுமாதமான வானதியை அவள் தூக்கியது வீழ்த்தியது எதுவுமே அவளுக்கு நினைவில் இல்லை. மூன்று வயதாகியும் வானதி கதைக்காத போதுதான் முதன்முதலில் டொக்டரிடம் காட்டினார்கள். அவர் இது பரம்பரையால் வந்ததாகவோ அல்லது உயரத்தில் இருந்து விழுந்ததாலோ ஏற்பட்டதாக இருக்கலாம். எனினும் வானதி கதைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று கூறினார். தெரியாத வயதில் அறியாமல் அவள் செய்ததை அவரவர் தங்கள் குழந்தைகளுக்கு கதையாக சொல்கையிலும் விபரம் தெரிந்ததில் இருந்து வானதியை அவள் பார்க்கையிலும் அவள் ஆழ்மனதில் பீறிட்டு எழும் வலியின் ஆழத்தையும் யாரும் அறிவதில்லை.
ஒருவரின் வாழ்க்கை இன்னொருவரிற்கு சுவாரஸ்யமான சம்பவம் ஆகிவிடுகின்றது போல. அவரவர் வலி அவரவர்க்கே. சிந்தனை ஓட்டத்தில் சுய பச்சாதாபம் மேலோங்க மீரா அந்த ஆழமான வலியுடனே அயர்ந்துபோனாள்.

2 comments:

  1. அறியாத வயதில் செய்த சிறு தவறு....காலபோக்கில் வஞ்சிக்க் படும்பொழுது மிகவும் வலிக்கிறது.
    மீண்டும் கீறப்படும் ரணம் போல...வலியை சொன்ன விதம் அழகு..............

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது உண்மைதான் அக்கா. நன்றி உங்கள் கருத்துகளுக்கு.

    ReplyDelete