Thursday, July 30, 2009

நீயும் நானும்

நீயும் நானுமாய் தீட்டிய அழகான ஓவியம்
எங்கே இருப்பது என்று தெரியாமல் தள்ளாட
நாங்கள் நாளை சாதனை படைப்பதற்காக
தனித்தனியாக
வரைகின்ற அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றோம்

என் கவிதை

எழுதப்படாத என் கவிதையை
வாசிக்க நீ துடித்ததில்
இழந்து போனது உன் நிம்மதி
விட்டு போனது என் சந்தோஷம்

திருமணம்

கனவுகள் இருந்தது எனக்கும்
உன் போட்டோவை அப்பா என்னிடம் நீட்டும்வரை
புதைத்துவிட்டேன் அவற்றை எவருமறியாமல்
என் ஆழ் மனத்தினுள்
அப்பாவின் சுமையைக் குறைப்பதற்காக
அந்த நாள் முதல் - நான்
உன் மனைவியானேன்
உன் தோழியானேன்
உன் காதலியானேன்
உன் தாதியானேன்
நீயே எனக்கு எல்லாமென - ஆனால்
நீயோ உன் அடிமையென்றாய்
ஒற்றை வார்த்தையால் கொன்றுவிட்டாய்
நடைப்பிணமாகத் திரிந்த என்னை

Tuesday, July 28, 2009

இடம்கொடு

காலை மாலை காத்திருந்தேன்
ஒரு கடைக்கண் பார்வைக்காக
பூக்களும் மாலையில் தலைகவிழ்ந்தன – உன்
புன்னகை காணாது
ஏட்டுச்சுரைக்காயே என்னளவில்
காதல் என்பது - உன்னைக்காணும்வரை
வானம் பூமியைத் தழுவிக்கொள்ள
வண்ண நிலவாய் நீ தெரிந்தாய்
நினைவே கனவாக கனவதுவே நினைவாக
வாழ்கிறேன் நானும் ஏகாந்தத்தில்
இதயத்தை நீ தரவேண்டாம் - என் அன்பே
எனக்கும் அதில் ஒரு இடம்கொடு

Sunday, July 26, 2009

உலகம்!

விழிகளை மூடுகிறேன்
தட்டிக்கேட்க முடியாமல்
தீயதைக் காணநேர்ந்தால்
காந்தியின் மேசைக் குரங்குபோல- ஆனால்
உள்ளத்தை..
அதன் உள்ளுணர்வை..
திரைபோட முடியுமா?
தொண்டைக்குழிவரை
எழுகின்ற வினாக்களைத்
திருப்பி அனுப்புகிறேன் எச்சிலுடன்
வலுக்கட்டாயமாக - பயத்தில்
வினாக்களை விழுங்கியவர் பலர்
விடைகளை வைத்திருப்பவர் பலர்
இதுதான் உலகம்!

Saturday, July 25, 2009

அப்பார்ட்மென்டும் அவஸ்தைகளும்

ஆறு மாதம் கூட ஆகாத என்பையன்
அர்த்த இராத்திரியில் தூக்கம் தொலைத்து
வீரிட்டு அழுதான் ஆறுதல் படுத்த முடியாத
அவஸ்தையில் நான்தன்தூக்கம் பறிபோனதாக படியேறி
வந்து கத்தினாள் என்கீழ் வீட்டு எஜமானி
அவளின் அலறலில்
அழுகை மறந்தது என் குழந்தை
ஆனந்தமாக சாரி கேட்டேன் அவளிடம் நான்!

அது மட்டும் எதுக்கு?

தனிமையின் சுமையை
பிரிவின் துயரத்தை
வலியின் ஆழத்தை
இழப்புக்களின் கொடுமையை
என தவறவிடாமல்
எல்லாவற்றையும் கொடுத்த நீ
இவற்றினை தாங்கும் என்
இதயத்தை மட்டும்
எடுத்துச் சென்றது ஏன்??

Friday, July 24, 2009

என் காதல்

எனக்குள்ளே...
அருவாகி
உருவாகி
உயிராகிய என் காதல்
உனக்குள் நான் என
உணர்வாலே ஒன்றாகிய
என் உயிர்க் காதல்
சலிப்பே இல்லாமல்
தரையைத் தழுவும் கடல்போல
சத்தமின்றியே இனிய சங்கீதமாய்
என்னுள் என்றும் ஒலிக்கிறது!

நானும் நீயும்!

புன்னகையை மறந்துவிட்ட நான்
உன் நினைவுகளில் புன்னகைக்கிறேன்!
கண்ணீர் சிந்திப் பசுமையிழந்த என் உள்ளம்
உனக்காகவே இன்னும் பாலைவனமாகவில்லை!
உன்னை நினைக்கும்போது மட்டும்..
உள்ளத்தில் மகிழ்ச்சி, உதட்டிலோர் புன்னகைக்கோடு
ஏமாற்றங்களை ஏற்கமுடியாமல்..
எதையுமே எதிர்பார்க்காத என் உள்ளம்
எதிர்பார்த்திருக்கிறது உன் வரவைமட்டும்!

Tuesday, July 21, 2009

அந்த வரிகள்.........

நீ அதிகம் படிக்கவில்லை என்றாலும் கிறுக்கலான எழுத்தில்

நீ எழுதிய ஆழமான அந்த வரிகள் - என்மீது

நீ வைத்திருந்த அன்பை உணர்த்தியதே.........

என்ன கோலம்????

கணவன் இறந்தால்..........

பூவைப்பறித்து...

பொட்டை அழித்து...

தாலியைக் கழற்ற...

வெள்ளை உடுத்தி...

விதவைக்கோலம்!

மனைவி இறந்தால்..........

மகனே உனக்கு என்ன கோலம்??????????????

இன்னும் இருக்கிறது.........

இதயத்தைப் பிழியும் வலிகள்,
இயங்கமறுக்கின்ற உடல்கள்,
சிந்திக்க மறுக்கும் மூழை,
செந்நெறி தவறிய உலகம்,
சுயநலத்தில் ஊறிய மனிதர்கள்,
இவை எல்லாம் என் கண்முன் விரிந்தாலும்....
இன்னும் எரிகிறது அந்த இலட்சிய நெருப்பு!
காலநதியின் ஓட்டத்தில்,
திசைமாறியது என் பயணமெனினும்
கனவாகிப் போகாது அந்த இலட்சிய வேட்கை!

எல்லாமே நீதான்!

உன்னை நான் அறிந்துகொண்டது...
மற்றவர்கள் என்னைப் பாராட்டும்போது

உன்னை நான் புரிந்துகொண்டது...
எனது நண்பர்கள் வாழ்க்கையில் திசைமாறிச் செல்கையில்

அப்போது உணர்ந்தேன் உனது வழிகாட்டலின் அவசியத்தை
அப்போது வியந்தேன் உன்னுள்ளே உறைந்திருக்கும்
உலக தத்துவங்களை!

நான் பின்பு புத்தகங்களில் படித்ததையே..
நீயோ சோறூட்டும்போது ஊட்டினாய்!

கடவுளைத் தேடி நான் கோவிலுக்கு ஓடவில்லை...
காரணம் பெரியாரல்ல!
எனக்கு முன்னால், என்னுள்ளே நீயிருக்கையில்!


என்றுமே உன்னுடன்......

நிச்சயமற்ற வாழ்வில்...
நீ என்னுடன் இருந்த பொழுதுகளில் எப்போதும் கூறுவாய்..
'உன்னுடன் நான் இருப்பேனென்று'..

நினைவுகளைச் சுமந்தபடி காத்திருக்கும் நான்
'இங்கே என்றும் உன்னுடன் இருக்கிறேன்'
மீண்டும் உன்னைச் சந்திக்கும்வரை!

நீ மட்டும் களைத்துவிடாதே!

விஞ்ஞானம் கோலோச்சும் இன்றைய உலகில்..
பத்து வயதிற்குள் படிப்பதில் களைப்பு!
இருபது வயதினுள் வாழ்க்கையில் சலிப்பு!
முப்பது வயதினுள் உலகத்தில் வெறுப்பு!

ஆனால்........

நீ மட்டும் நிற்காமல் ஓடுவதே..
மனக்காயங்களுக்கு மருந்தாகிறது!
சலிப்புற்ற உள்ளங்களுக்கு புத்துணர்வாகிறது!
அதனால் நீ மட்டும் களைத்துவிடாதே!

முடியவில்லை

பக்கத்திலோ பத்து வருடமாகக் காதலித்துக் கரம்பிடித்த
பதிவிரதையான என் மனைவி!
உலக அழகிப் போட்டிக் போயிருந்தால் 'மிஸ் வேல்டாக' இல்லாவிட்டாலும்
'மிஸ் நாடு' ஆகி வென்றிருப்பாள் - எனினும்
கடந்துசெல்லும் ஒரு சாதாரண 'பிகரைக்கூட' என்னால்
கண்ணில் வைக்காமல் இருக்க முடியவில்லை!

பயணம்

நண்பனே!
ஒரே இலக்கில் இருவரும் புறப்பட்டோம்!
பாதை தெரியாது; பயணம் புதிது,
பயணம் பற்றிய சந்தேகத்தை மறைத்து, - எனினும்
மனதில் இலக்கை மட்டும் நினைத்துக்கொண்டோம்!
ஒருவருக்கொருவர் நம்பிக்கையூட்டினோம்!
இலக்கை எட்டுமுன் இருவரும் திசைமாறினோம்!
இப்போதுதான் உன்னைப்போலவே நானும் அறிந்துகொண்டேன்..
ஏற்கனவே பலர் எம்போன்று திசைமாறியிருப்பதை!

எது உண்மை?

காதலித்தால் கவிதை வரும் - அது உண்மை

கவிதைக்குப் பொய் அழகு – அதுவும் உண்மை

காதலும் ஆதலால் பொய்யாகுமோ!

தேடுகிறேன்!

எனக்குள் உன்னைத் தேடுகிறேன்!

எவர்க்கும் தெரியாமல்..

எப்போதோ, எங்கோ புதைத்தவிட்டு – மீண்டும் இப்போது

எனக்குள் உன்னைத் தேடுகிறேன்!

நான் புதைத்தது எவர்க்கும் தெரியாதுதான் - ஆனால்

உனக்கும் தெரியாதா?

தெரிந்துதான் மறைத்தாயா அன்றி

தெரியாமல் மறந்தாயா – எனினும்

என்னால் முடியவில்லை – அதனால் இன்றுவரை

எனக்குள் உன்னைத் தேடுகிறேன்!

இதுவும் காதல்தான்!

பகிரப்படாத உணர்வுகள்;

பார்வையால் பேசிய சந்திப்புக்கள்;

மனதிற்குள் மலரும் புன்னகைகள்;

இருவருக்கும் மட்டும் தெரியும்படியாக....

ஒருவரில் மற்றவர் காட்டும் கரிசனைகள்;

தீர்மானிக்காமலே இடம்பெறும் காத்திருப்புக்கள்;

இறுதிவரை வாய்கள் பேசாதிருந்திருந்தாலும்....

இதுவும் காதல்தான்!