Saturday, October 13, 2012

என் காதல்

காத்திருந்து
தருணம் பார்த்து
நடுங்கியபடி
வாய்குழற
உன்னிடம்
என் காதலைச்
சொன்னபோது
சொன்னாய்
நான்
அவனை
காதலிக்கிறேனென்று..

என்னோடு நீ


நிஜங்களை வேண்டுமானால்
நீ ஊமையாக்கியிருக்கலாம்
என் நினைவுகளையோ
கனவுகளையோ அல்ல..

கலைந்த கனவுகள்


நிஜங்கள் மாறி
நிறமற்றுப் போனதால்
என் கண்கள் சுமந்த
கனவுகள் எல்லாம்
இன்று கண்ணீராய்...

எங்கே நான்?


கிறுக்கிய கவிதைகள்
எழுதிய கடிதங்கள்
அனுப்பிய வாழ்த்துக்கள்
என்று அத்தனையையும்
பத்திரப்படுத்திய நீ
என் இதயத்தை மட்டும்
ஏன் தொலைத்தாய்??


"Death leaves a heartache no one can heal,
Love leaves a memory no one can steal"

ஏன் கற்றுத் தந்தாய்?


காதலை எனக்கும் கற்றுத் தந்துவிட்டு
காணாமல் நீ போய்விட
கனவுகளை விரட்டுவதற்காய்
நினைவுகளோடு போராடியபடி நான்...

கவி


உன்னோடு பேசாத நேரங்களில்
பிறக்கின்றது கவிக் குழந்தைகள்

வானும் மண்ணும்


வானும் மண்ணும் போல
நீயும் நானும்
பிரிந்துதான் இருக்கின்றோம்
நினைவுகளில் சுற்றியபடி..

கவி


ஒற்றைவரிக் கவிதை கேட்டாய்
கவிதையொன்றே
கவிதை கேட்டதால்
விக்கித்துப் போயின சொற்கள்.

உன் காதல்..


பாலைவனத்தில் நின்றுகொண்டு
பூக்கள் தேடிப் பாடும்
பைத்தியக்காரியாய்
என்னை மாற்றியது
உன் காதல்..
கேவிக் கேவி
அழுகின்றேன் நான்
கெக்கட்டம் விட்டுச்
சிரிக்கின்றன
உன் நினைவுகள் என்னுள்..
திருவிழாவொன்றில்
தாயைத் தேடும்
குழந்தையைப் போல
உன்னைத் தேடி
நான் தொலைகின்றேன் அன்பே..
நெஞ்சுக் கூடு காலியாகி
எண்ணங்கள் தொலைந்துபோய்
இனம்புரியாத வலியொன்று
இதயத்தை துளைக்க
இங்கே நான் நடைபிணமாக...

காதல்..


வலியில் துடிக்கையில்
வரிகள் தேடுறேன்
வார்த்தையின்றி
நான் புலம்பித் தவிக்கின்றேன்
கண்கள் எழுதிய
காதல் கதையின்று
கலைந்து போனதால்
கண்ணீர் நதியிங்கு
இரவின் மடியிலே
உறக்கம் தொலைத்து நான்
நினைவு ஊஞ்சலில்
நித்தம் சுழல்கின்றேன்
எனக்கு நீயென
எழுதிய எழுத்தில்
எழுத்துப் பிழைகள்
எதற்கு வந்தது
காதல் படகொன்று
கவிழ்ந்து கொண்டதில்
கரையில் இருந்தும்
நான் தத்தளிக்கின்றேன்.
போடா என்று சொல்லிவிட்டு
புலம்புகின்றேன்
நானடா
நீ போனபின்பு பின்னால் நின்று
ஏங்குகின்றேன்
ஏனடா?
இதயத்தில் கதையெழுதி இறகாலே வருடிவெட்டு எங்கேயோ நீயும் போக இங்கிருந்து பாடுகின்றேன்...

கண்ணாடிக் குவளைக்குள்
மோதும் மீனாக
உன் நினைவுகளோடு
என் மோதல்..
மீன்தொட்டி இப்போது
பிடிக்காமல் போயிற்று
ஆயுள் கைதியான
அண்ணனை நினைவுபடுத்துவதால்..
உன் துப்பாக்கி முனையில் விரிவதால்
என் புன்னகையும் பொய்ச்சாயம் பூசுகிறது..
ஞாபகங்களாலும் காலங்களாலும்
கடக்க முடியாத நினைவாக எனக்குள் நீ..
மரணித்துப் போகும் காதலை விட
மௌனித்துப் போகும் காதலின் வலி பெரியது
எனக்கு நீ எவ்வளவு முக்கியம் என்று
உனக்கு மட்டுமேன் புரியமாட்டேன்குது??
நான் தேடிக் கொண்டிருக்கின்றேன்
நீ தொலைத்துவிட்ட
என் மீதான அன்பை..
இரவு வரும்போதெல்லாம்
தெரிகின்றது
நாளை விடியுமென்று..
விடியும் போதே
நினைக்கின்றது
மனம்
இரவு வருமேயென்று...

நெஞ்சை ஊடுருவும்
ஒரு மெல்லிய சோககீதம்
காற்றில் தவழ்கின்றது
ஆம்!!
என் தேவதையின்
மௌனத்தின் ஒலியாக
அது எங்கும் வியாபித்திருக்கின்றது...
நீ விலகிப்போனதால்
இறந்துகொண்டிருக்கின்றன
என் கனவுகள்..
நினைவுகளில் நீ..
நிஜத்தில் அவன்..
கனவுகளில் நான்...
எனக்காய் விழிநிரம்பி வழிகின்ற
நீரை தடுத்து விழுங்க
உன்னால் முடிந்தால் சொல்
நானும் என் காதலை
மறந்து போகின்றேன்..
சுடுமென்று தெரிந்தும்
நெருப்புகளை நீ
ஏன் கக்கிப் போகிறாய்??
உறவென்று சொல்லியிருந்தால்
ஒரு நாள்
நானும் மறந்திருப்பேன் உன்னை
நீ உயிரென்றல்லா
சொல்லி சென்றாய்
ஆதலால் துடிக்கிறேன்
நானிங்கு..நீயற்று...
எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்திற்கு
காரணமோ இல்லையோ
எனக்கும் உனக்குமான
எல்லா சண்டைக்கும்
அவைதான் காரணம்..
கதியற்று நிற்பவன்
கையறு நிலையில்
கடவுளே கதி
என்று நினைக்கையில்
நாத்திகம் பேசுவது அநாகரீகம்..
உலகில் உன்னை வென்ற திருடி தெரியாது எனக்கு
எனக்குள் துடித்து உனக்காய் வாழ்கிறதே..
என் இதயம்
அளவற்ற மோதிரம் ஒன்று
பிடித்துப் போனதால்
அவஸ்தையே எனக்கு
மிஞ்சிப் போனது..
இளையராஜாவும்
இந்த ஏகாந்தமும்
எரிச்சலூட்டும் இரவுகளில்
என்னை யார் தாலாட்டுவார்
என நீ விட்டுப் போனாய்??
உன்னை கோபிக்கும் கணங்களில் தான் யோசிக்கின்றேன்
நான் உன்னை எவ்வளவு நேசிக்கின்றேன் என்று..
அக்காக்கு குழந்தையாம்
ஆசையாய் வந்த மாமன்
உட்கார்ந்து அழுதிச்சாம்
அடுத்ததும் பெட்டை என்று
என் பிறப்பின் இரகசியம்..
ஐந்து நிமிடம் கதைத்தவர்களையே
மறந்துவிடாமல் இருக்கையில்..
ஆயுசுக்கும் நீதான்
என நினைத்த உன்னை
எப்படி மறப்பேன் சொல்லு??
எங்கு, எப்படி விழுந்தேன் என்று தெரியவில்லை..
எழ முடியாமல் விழுந்து கிடக்கின்றேன்
என்பது மட்டும் தெரிகின்றது உன்னிடத்தில்..
நினைவுகளை அழிக்கவில்லை
அதில் நீ வாழ்கின்றாய் என்பதால்..
கனவுகளை அழிக்கின்றேன்
என் கண்ணீரால்
அது கற்பனை ஆனதால்..
விடுதலை எண்ணமே
எனக்கு இல்லை
விழுந்து கிடப்பது
உன் நினைவுச் சிறைக்குள் என்பதால்.
உன் விழிகள்
கவிதையான போது
என் மொழிகள்
ஊமையாகிப் போயின
என் காயங்களின் இரத்தம்
எழுத்துக்களில் வடிந்துவிடத் துடிக்கிறது..
நடக்காது என்று தெரிந்தும்
நடப்பது பற்றியே கற்பனை விரித்து
எதிர்பார்த்திருக்கும் நாட்களில்
ஏமாற்றங்களைத் தவிர
என்ன மிஞ்சும் என்னோடு??????

என் கனவுகள்
எல்லாம்
பனித்துளியாய்
காலையிலேயே
கரைகின்றன..

நீ தந்த..என்ன தந்து
நீ செல்கின்றாய்
என கேட்க முடியாது...
எண்ணற்ற
ஏமாற்றங்களை
நீ தந்துதானே
போயிருக்கின்றாய்???

தொடரும் மௌனம்முற்றுப் பெறாத
விவாதங்களை விட
முடிவற்ற மௌனங்கள்
பிரச்சினைகளை
தீர்க்குமெனில்
நானும்
ஆசீர் வதிக்கின்றேன்
அவை தொடரட்டுமே...

சருகு

கிளையிலிருந்து
உதிரும் இலையாக
என் கனவுகள்
சருகாகின்றது

புன்னகை


உன் உதடுகள்
புன்னகைக்க மறுத்ததால்
வறண்டு கிடக்கிறது
இந்தப் பூமி