Saturday, October 17, 2009

காதல் நினைவுகள்!


தீராத காதல்
தரைமீது அலைக்கு
தட்டித் தரை கழித்தாலும்
கரையை வந்து பார்ப்பதற்கு
அலைகள் மறப்பதில்லை
கரையும் மௌனித்தது
கடைசிவரை நிறைவேறா
காதல் இதுவென்று
அலையது சுமந்துநின்ற
ஆசைக் காதலது
கைகூடாவிட்டாலும்
களித்திருந்தது தன்
காதலியைத் தினம் காண்பதனால்

கரையும்....
காதலதை மனம்சுமக்க
காதலரைத் தான் தாங்கி
களிப்படைந்தது

கரையின் மடியில்
கடலலையின் அரவணைப்பில்
கைகோர்த்து நாம் நடந்த
காலடித் தடம் தேடுகின்றேன்
கரையைத் தொடும் அலைகள்
களவாடிச் சென்றன அவற்றை
கரையைப் போல் நானிருக்க
தழுவிச் செல்கின்றன அலையாக
உன்நினைவுகள்!

Friday, October 16, 2009

என் கவிதை


இரவின் நிசப்தத்தில்

விழிகள் மூட மறுத்ததால்

எழுதத் துடிக்கிறது

எந்தன் பேனா


கவி ஒன்று வரும் என்று

கைகள் கிறுக்கிய போது

எழுதப்பட்டது எல்லாம்

உந்தன் பெயர் மட்டுமே


வெண்ணிலவையும்

மின்னும் நட்சத்திரங்களையும்

பரந்து விரிந்த கறுத்த வானத்தையும்

பார்த்தபடி காத்திருக்கிறேன்

உந்தன் வருகைக்காக

Thursday, October 15, 2009

காதலைத் தெரிந்துகொள்

உன்னை பிடிக்கும் என்று
ஓராயிரம் காரணம் சொன்னேன்
ஒற்றைச் சொல்லில்
பிடிக்கலை என்று ஏன் சொன்னாய்
ஒரு காரணமும் சொல்லாமல்

சுற்றிய தெருக்களும்
பேசிய விழிகளும்
தூங்காத இரவுகளும்
பேசாத வார்த்தைகளும்
அறியும் என் காதலின் ஆழத்தை

என்றோ ஒருநாள்
உன்வாழ்விலும் காதல் வரும்
அப்போது அதன் சோகங்களை
நீ உணராவிட்டாலும்
சந்தோசங்களயாவது தெரிந்துகொள்
வாழ்க்கை முழுமை பெறட்டும்!

Monday, October 12, 2009

நீ வருவாய் என!


இற்றைவரை தெரியவில்லை
எப்போது உன் வருகையென
குமுறி அடங்கும் விம்மல்களை
இதயச் சுவரது தாங்காது
வெளியில் வீசுகிறது
உஷ்ணமான பெருமூச்சுக்களாக
இதயத்துடன் பேசுகிறேன்
அருகில் நீ இருப்பதாக


பகிர்ந்துகொள்ளநீ வருவாய் என
பல நாளாய் என்னுள்
சேர்த்துவைத்த
சின்னச் சின்ன சந்தோசங்களும்
மனதை அரிக்கும் சோகங்களும்
எவரும் திறவாப் புத்தகமாய்
இறைந்து கிடக்கிறது
மனம் நிறைய!

Saturday, October 10, 2009

இரங்காத காலம்!



காத்திருந்தாள்
அவன் தருவானென்று,
கனிவான பார்வை;
கண்களால் ஒரு செய்தி;
காற்றினில் ஒரு முத்தம்;
கடைசிவரை
அவன்கரையவில்லை
கடந்துசென்றது
காலம் மட்டும்!
மறைந்துவிட்டாள்
அவளும் எங்கோ!


தேடுகிறான்
அவள் தடத்தை
நடந்துசென்ற
பாதைகளில்!
அவள் விழியை
கடந்துசெல்லும்
முகங்களில்!
துணிந்துவிட்டான்
காதருகில் மெல்ல
என் தேவதை நீ
என்றுகூட சொல்வதற்கு!
கரையவில்லை
காலம் மட்டும்
அடித்துச் சென்ற அவளை
திருப்பித் தருவதற்கு!

Sunday, October 04, 2009

விதியால் தொலைந்த அழகு



உன்னை பார்க்காமல்
ஓடிப்போயிற்று ஈராண்டு
கடிகார முள்ளை அடிக்கடி
பார்த்திருக்கேன்
ஒவ்வொரு வினாடி
நகர்தலிட்கும் காத்திருக்கேன்

போய்விட்ட நாட்களில்
நினைத்து பார்க்கலை
நீ இப்படி மாறியிருப்பாய் என்று
ஒட்டிய கன்னமும்
ஓரளவு லீக்கல் விழுந்த பற்களும்
உச்சி வரை முடி நரைச்சு
என்ன நடந்தது??

நன்றாகத்தானே இருந்தாய்
நான் இங்கு வரும்பொழுது
காலம் பறித்ததுவோ??
கவலை தான் தின்றதுவோ ??
அழகான அம்மா நீ
அவசரமாய் மாறியதேன்??

உன் படம் பார்த்த பையன்
யாரிந்த கிழவி என்று
தயங்காமல் கேட்கின்றான்
என்ன பதில் நான் சொல்ல??

விம்மல் எழுகையிலே
விரல்கள் தழுவுது
உந்தன் புகைப்படத்தை
கணனியிலே!

கால நகர்வின்
கடைசி நிமிடங்களையும்
வெறுத்து சபிக்கின்றேன்
இறந்து கொண்டிருக்கும்
உன் இளமையினை
மீட்க தெரியாமல்!

Saturday, October 03, 2009

முரண்நிலை



அலையென ஆர்ப்பரிக்கும்
மனங்களின் மத்தியில்
மௌனங்களின் நிசப்தத்தால்
மயான அமைதி!

சோகங்களின் மிகுதியால்
சுருண்டுவிட்ட இதயங்களின்
நம்பிக்கைக் கீற்றாக
உதட்டில்மட்டும் புன்னகைக்கோடு!

சரவெடிச் சிரிப்புக்கள்
வானைப் பிளக்க
சத்தமின்றிக் கசிகிறது
இரத்தக்கண்ணீர்!

சந்தோசக் களிப்பில்
ஊர்கள் மிதக்க
சத்தியம் தப்பிய
சாவுகள் நிரம்பிவழிகிறது!