Thursday, August 20, 2009

வாழ்க்கை வாழ்வதற்கே தான்

வலிகள் சுமப்பதற்கே தான்
இதயம் எதையும் தாங்கவே தான்
இடிபுயல் போல பிரச்சினை வந்து
இருப்புக்கள் எல்லாம் இழந்ததன் பின்பும்
உறவுகள் என்ற சுயநலம் கொண்ட
மனிதர்கள் எல்லாம் உன்னை
ஒதுக்கிய பின்பும்
பணம் பொருள் பதவி எல்லாம்
பறிபோன பின்பும்
நம்பிக்கையோடு நீ காத்திரு
நாளை உனக்கான விடியல்
வரும் அதுவரை பொறுத்திரு
ஏனெனில் வாழ்க்கை வாழ்வதற்கே தான்.

என் பயணம்

இழப்புக்களின் வலிகளையும்
பிரிவுகளின் துயரத்தையும்
உணர்ந்திருக்கின்றேன் நான்
சுமப்பதற்காக பிறந்ததனால்
சுகமாகிப் போயின சுமைகளும்
இனியென்ன உள்ளதென்று
இருவிழி நனையவில்லை
மனமெல்லாம் முரடாகி
மானிடரை வெறுக்கவில்லை
கண்ணீர்த்துளிகளின் உப்புச்
சுவைகூட கரிப்பதில்லை எனக்கு
வலிகளையே வாழ்க்கையாக்கி
நீண்டு செல்கின்றது என் பயணம்
விழிவழி வழியும் நீரை
நிமிண்டி விடுகின்றது என் விரல்கள்
யாருக்கும் தெரியாமல்
வடுக்கள் ஏதும் குறையாத போதிலும்
பாதைகள் யாவும் கரடாக இருக்கையிலும்
பயணிக்கவேண்டிய கட்டாயத்தில் நான்........

புரியாத புதிர்

இரு தசாப்பதங்களுக்கு மேலாக
படிக்க முனைந்து
விளங்கிக் கொள்ளமுடியாமல்
நான் தோற்றுப் போன
ஒரு கடினமான அத்தியாயம்
இருப்புக்கள் தொலைந்து
இழிநிலை வரினும்அ
வள் மௌனம் கலைவது இல்லை.
கொடுந்துயர் வந்து
குடும்பமே கலங்கினாலும்
அவள் நிதானம் இழந்தது இல்லை
இப்போதும் கூட எனக்கு
அவள் ஒரு புரியாத புதிர் தான

விந்தை மனம்

முடிவிலியா இந்த மனத்திற்கு
தாங்கு சக்தியும் அதன் நீட்சி எல்லையும்
உயிரையே பிழிந்தெடுக்கின்ற
வலி மிகுந்தாலும் வலுவிழக்காது
வாழ்வதற்காகப் போராடத் துடிக்கும்
விந்தை மனது இது!

Wednesday, August 05, 2009

ஏன் மறுக்கிறான்?

வேட்டையாடி,
விலங்கு வளர்த்து,
வேளாண்மை செய்தார் - அப்போது
அவர்களுக்கு ஊரும் இல்லை - அங்கு
கோயிலும் இல்லை

இனங்கள் பெருகின
போட்டிகள் தோன்றின
தன்னை விஞ்சிய
அனைத்தையும் வணங்கினர்
விதிமுறை வகுத்தனர்
எல்லைகள் குறித்தனர்

தேவைக்கேற்பவே
கண்டுபிடிப்புத் தொடர்ந்தது
சாதிகள் வளர்ந்தது
சமயங்கள் பெருகின

சமூக ஒழுங்கிற்காய்
சாத்திர விதிகள்
சாத்வீக வாழ்வுக்காய்
சத்திய போதனைகள்

மறந்தான் மனிதன்
மானுடத்தை
மனிதத்தை
ஆன்மாவின் நேயத்தை

இழந்தான் வாழ்வின்
இன்பத்தை
அமைதியை - தன்
இருப்பைக்கூட

வலியன் கூறுவதே
வேதம் ஆனது
எழியவர் என்றுமே
அடிமைகள் ஆயினர்

கடவுளைப் படைத்தான் - ஆனால்
கருணையை மறந்தான்
தானங்கள் கொடுத்தான் - ஆனால்
ஏழையை மறந்தான்

சாத்திரம் சடங்கை
மாற்றினான் தன் வசதிக்காக
மாற்ற மறுக்கிறான் - சில
மூட நம்பிக்கைகளை மட்டும்

Tuesday, August 04, 2009

சிலவேளை...

சிலவேளை நான் சுவாசிக்கலாம் - நாளை
உன் பிரசன்னத்தின் சுகந்தத்தை
சிலவேளை நான் உனது கைகளுடன் - நாளை
எனது கைகளையும் கோர்த்து நடக்கலாம்
சிலவேளை நான் மகிழ்ச்சியில் - நாளை
சிரிக்கலாம், ஏன் அழவும்கூடும் - ஆனந்தத்தில்

சிலவேளை தனிமையின் துணையுடன்
மௌனத்தில் கரையும் என் பொழுதுகள் - சோகத்தில்

பலவேளைகளில்..
சிலவேளை...........இருந்திருந்தால் என்றெண்ணி
நானே மௌனமாகிவிடுகிறேன்

Sunday, August 02, 2009

நகரம்

புழுதிபடிந்த தெருக்கள்
புகை கசியும் ஊர்திகள்
புன்னகை மறந்த மனிதர்கள்
பூக்களில்லாத ஆலயங்கள்
இயக்கமின்றியே இயங்குகிறது நகரம்
பழைய கடதாசிகள் குப்பைகளாக
வேலியை அலங்கரிக்கின்றன
உருக்குலைந்த பனையோலைகள்
வீதியோரத்தில் நானும் எவர்க்கும் பயனின்றி

உன் பாசம்

பாசம் என்பது யாருக்கு இல்லை
பளிச்சென வெளிப்படுத்துவதில்தான் பலருக்கு சிக்கல்
பதுக்கிவைத்தால் எவருக்கும் தெரியாது
உன் பாசம் என்பதை மற்றவர் உணர்ந்தாலே - அது
மலையருவியாக உன்மீது சொரியும்
பலாப்பழம்போல பாசமும் என்றால் - எவர்
காத்திருப்பார் அது கனியும்வரை
இன்று உன்னுடன் அருகில் இல்லை
நேற்றுவரை உன்னுடன் ஒன்றாக உண்டு உறங்கியவர்கள்
நாளையும் எப்படியோ யாரறிவார் நம் விதியை
வட்டிபோட்டு சேர்த்திடாமல் வாரியிறைத்துவிடு
வாழும்காலம் முடிந்தபின்னும் வாழும் உன் பாசம் என்றும்