Tuesday, February 16, 2010

விடுபட முடியாமல் ....


இருள் அகலாத காலை பொழுதினில்
எனக்குள் இருந்த உறக்கம் தொலைந்தது
இறுக்க மூடிய போர்வை விலக்கி
கண்களை கசக்கி கடிகாரம் தேடினேன்
பிள்ளையார் கோவிலின் பெரியமணி
மூன்று தடவைகள் அடித்து ஓய்ந்தது
எங்கோ தொலைவில் ஒற்றைக் குயில்
கூவி இசைப்பது காதில் ஒலித்தது
வேப்பமரத்து காக்கா விடியவே
வந்து தன் வரவு பகிர்ந்தது
மெல்ல ரெலிபோன் சிணுங்கும் சத்தம்
மிச்சம் இருந்த சோம்பலை பறித்தது
எட்டி மெல்ல எடுத்த போது
என்னவள் குரல் இதமாய் இருந்தது
"செல்லம்" என்ற சிணுங்கல் சத்தம்
சிட்டாய் எந்தன் நெஞ்சை நிறைத்தது
எதிர் இருக்கைகாரன் எழுந்து செல்ல
மெல்ல சொன்னான் பாதோம் (மன்னிக்கவும்)என்று
கண்கள் திறந்து வெளியே
பார்க்கையில் கடந்திருந்தேன்
இறங்கும் இடத்தை ....

No comments:

Post a Comment