Tuesday, March 02, 2010

கனவுகளில் காண்கின்றேன் ...


ராசாத்தி நீ என்னை ஒரு நாலரை போல எழுப்பிவிடு. வாழையளுக்கும் மரவள்ளிக்கும் ஒருக்கா இறைப்பம். வரம்பு கட்டினது நாரி எல்லாம் விண் விண் எண்டு வலிக்குது.

'சரி சரி நீங்க படுங்கோ. எழுப்புறன்.' அவள் கூடை பின்னுவதிலேயே கவனமாய் இருந்தாள். என்ன அலுப்பு .........

ராசாத்தி அடிக்கடி என்னால சைக்கிள் ஓடமுடியாது. தேவையான எல்லாத்தையும் இப்பவே மருமோன்மாரிட்ட சொல்லிவிட்டுடு.
எங்கயோ தூரத்தில் இருந்தபடி அவள் என் குரலுக்கு 'ஓம் ஓம்' எண்டு கேட்டது.
என்ர காலையே சுத்தி சுத்தி நிண்டவள். இப்ப கண்ணிலேயே படுறாள் இல்ல. இருக்காதே பின்ன. எனக்கே எவ்வளவு சந்தோசமாய் இருக்கு. நாலு பொண்ணுகளும் வந்து நிற்குதுகள். மனசு மாதிரி வீடும் நிறைஞ்சு போச்சு.
நாளைக்கு பெரியவளின்ர பையனுக்கு கொழுக்கட்டை கொட்டுவம் எண்டு தான் அடுக்கெடுப்பு நடக்குது. இதில அடுத்தவளுக்கு வாற மாசம் பெறுமாதம். மூன்றாவதும் கட்டிகொடுத்ததுக்கு இப்பதான் முதல்தடவையாக வந்திருக்கிறாள். கடைக்குட்டி கம்பஸ் சாப்பாடு சரியில்லை போல வாடி வதங்கி வந்திருக்கு பிள்ளை.
அவளுக்கு எங்கை நேரம். ஆளாளுக்கு தேவையானது எல்லாத்துக்கும் பறந்துகொண்டிருக்கையில் காலமை என்ர தேத்தண்ணியை கூட கொடுக்கேல்ல. கடைக்குட்டியை கேட்டுத்தான் குடிச்சன்.
இப்ப அவளுக்கு மத்தியான சமையல் அவசரம். எத்தனை நாளைக்கு பிறகு இப்டி ஒரு கலகலப்பு வீட்டில.
என்ர பொண்ணுகள் எல்லாம் கொடுத்து வச்சதுகள். வந்த மாப்பிள்ளைமார் தங்கம். தங்கட பாட்டில எல்லா அலுவலும் நடக்குது.
இப்படியே எல்லோரும் சந்தோசமாக இருக்கோணும் எண்டு உள்மனசு நினைக்கயிலயே கண்ணும் கலங்கி போகுது.

ராசாத்தி வயிறு புகையுது ஏதாவது சாப்பிட தாறியா... எங்கை இவள்? ராசாத்தி ராசாத்தி ....

கூடை நழுவி இருக்க சுவரில் சாய்ந்தபடி தூங்கியிருந்தாள் என் ராசாத்தி. மழைக்கு அவள் வைத்த ஒழுக்குசட்டி நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. தூக்கணாங்குருவி இரண்டு குடும்ப போட்டோவை திரும்ப திரும்ப கொத்தியபடி இருந்தது.

No comments:

Post a Comment