Sunday, March 07, 2010

தப்புகணக்கு


ஏங்க அவங்களுக்கு அறிவில்லையா? அப்படியெண்டா முதலே call பண்ணியிருக்கலாம் தானே? இப்போதான் வேலையால வாறியள். இனி திரும்ப போறதெண்டா சும்மாவா?


"என்னடா செய்ய. நிறைய things போல. அதுதான் கேட்கினம். " என்னை சமாதான படுத்தும் தோரணையில் என்னவர்.
அப்போ டாக்ஸி பிடிக்கிறதுதானே? புறுபுறுத்தபடியே பையனை தூக்கிக்கொண்டு றூமுக்குள் போய்விட்டேன் நான்.
" உனக்கு தெரியும் தானே. அவயளிண்ட பாடும் இப்ப கொஞ்சம் இறுக்கம்" என்று சொல்லியபடியே இறங்கிப் போய்விட்டார் இவர்.

பெரிசா எதுவுமில்லை. ஜேர்மனி போயிருந்த ஜெயாக்கா திரும்பி வாறா. அதுதான் உதவிக்கு இவரை ஸ்டேஷன் இற்கு வரச் சொல்லி கூப்பிட்டவ. இவரிட்டை என்ன கார் இருக்குதே? அவரு திரும்பி வந்த போது கூட என் கோவம் குறையவில்லை.

மதியம் வீடை நிற்பியளோ எண்டு கேட்டு ஜெயாக்கா call எடுத்தா.

"ஓமக்கா. வாங்க நேரில கதைப்பம்" எண்டு வச்சுட்டன்.

இவர் வந்த பிறகு தான் அவையளும் வந்திச்சினம். கை நிறைய bag .
பையனுக்கு வோல்க்கர், பொண்ணுக்கு அவளின்ர வயசு சைக்கிள், இவருக்கு ஒரு ஜக்கட், சண்ட்விச் செய்யுற ஒரு மெசின்.,எனக்கு மொடலான ஒரு சப்பாத்து என்று

வாங்கணும் என்று பேச்சுவாக்கில் நான் சொன்னது அடங்கலாக நிறையவே அக்கறையோட வாங்கி வந்திருந்தா ஜெயாக்கா.


அவ ஒவ்வொன்றாக எடுத்து வெளியில் வைக்க என்னவர் நிமிர்ந்து என்னை பார்த்தார்.

அந்த விழிகளை ஏறிடும் துணிவின்றி கிச்சினிற்குள் புகுந்தேன் தேனீர் தயாரிக்கும் சாட்டில்.

Saturday, March 06, 2010

காதலுடன்



மூளை சொல்லியும் கேட்காமல்
என் மனது உன் பின்னால் வருகிறது
இருபார்வை சங்கமித்து
இதயங்கள் ஒன்றாகி வருவது ..
அதுதானே காதல்
தெரிந்தும் எதற்கு
இத்தனை முரண்டு எனக்குள்

கருக தொடங்கும் எந்தன் காதல்
துளிர்த்துவிடுகின்றது உந்தன்
ஒற்றை பார்வையில்
அடுக்கடுக்காய் விளக்கம் சொல்லி
விலகிப் போய்விட
உன் செயல்களுக்கு அர்த்தம்
நான் தேடுகையில்
ஒருவார்த்தை சொல்லி என்னை
உசுப்பி நீ போகிறாய்

மீளவும் முடியாமல்
மீட்கவும் முடியாமல்
நானிங்கு போராட
வாழவும் இயலாமல்
சாகவும் துணியாமல்
என் மனதிங்கு தள்ளாட
என்ன செய்வேனடா நான்
உந்தன் மீதான
ஒருதலைக் காதலுடன்

Wednesday, March 03, 2010

நாங்கள் இல்லாமல்


நானும் நீங்களுமாய்
வாழ்ந்த தெருக்களில்
உங்கள் பாதச்சுவடுகளை
தேடி போனேன்
கணக்கின்றி வளர்ந்திருந்தது
தகரைகள் எங்கள் வீதியில்
எட்டி பிடுங்கிய புளியமரம்
எறிந்து பிடுங்கும் அளவு
உயர்ந்து இருக்க
தோடு போட்ட கொன்றை மரம்
பூத்து குலுங்க
வாசல் வேப்பமரத்து
அந்த ஜோடி காக்கைகள்
நேரம் தவறாமல் வந்து அழைப்புவிட
பனங்காய் சாப்பிட அந்த சிவப்பி மாடு
இப்பவும் வேலியால் வர என்று
எதுவும் மாறாமல் இருந்தது
நாங்கள் இல்லாத எங்கள் வீட்டிலே

Tuesday, March 02, 2010

கனவுகளில் காண்கின்றேன் ...


ராசாத்தி நீ என்னை ஒரு நாலரை போல எழுப்பிவிடு. வாழையளுக்கும் மரவள்ளிக்கும் ஒருக்கா இறைப்பம். வரம்பு கட்டினது நாரி எல்லாம் விண் விண் எண்டு வலிக்குது.

'சரி சரி நீங்க படுங்கோ. எழுப்புறன்.' அவள் கூடை பின்னுவதிலேயே கவனமாய் இருந்தாள். என்ன அலுப்பு .........

ராசாத்தி அடிக்கடி என்னால சைக்கிள் ஓடமுடியாது. தேவையான எல்லாத்தையும் இப்பவே மருமோன்மாரிட்ட சொல்லிவிட்டுடு.
எங்கயோ தூரத்தில் இருந்தபடி அவள் என் குரலுக்கு 'ஓம் ஓம்' எண்டு கேட்டது.
என்ர காலையே சுத்தி சுத்தி நிண்டவள். இப்ப கண்ணிலேயே படுறாள் இல்ல. இருக்காதே பின்ன. எனக்கே எவ்வளவு சந்தோசமாய் இருக்கு. நாலு பொண்ணுகளும் வந்து நிற்குதுகள். மனசு மாதிரி வீடும் நிறைஞ்சு போச்சு.
நாளைக்கு பெரியவளின்ர பையனுக்கு கொழுக்கட்டை கொட்டுவம் எண்டு தான் அடுக்கெடுப்பு நடக்குது. இதில அடுத்தவளுக்கு வாற மாசம் பெறுமாதம். மூன்றாவதும் கட்டிகொடுத்ததுக்கு இப்பதான் முதல்தடவையாக வந்திருக்கிறாள். கடைக்குட்டி கம்பஸ் சாப்பாடு சரியில்லை போல வாடி வதங்கி வந்திருக்கு பிள்ளை.
அவளுக்கு எங்கை நேரம். ஆளாளுக்கு தேவையானது எல்லாத்துக்கும் பறந்துகொண்டிருக்கையில் காலமை என்ர தேத்தண்ணியை கூட கொடுக்கேல்ல. கடைக்குட்டியை கேட்டுத்தான் குடிச்சன்.
இப்ப அவளுக்கு மத்தியான சமையல் அவசரம். எத்தனை நாளைக்கு பிறகு இப்டி ஒரு கலகலப்பு வீட்டில.
என்ர பொண்ணுகள் எல்லாம் கொடுத்து வச்சதுகள். வந்த மாப்பிள்ளைமார் தங்கம். தங்கட பாட்டில எல்லா அலுவலும் நடக்குது.
இப்படியே எல்லோரும் சந்தோசமாக இருக்கோணும் எண்டு உள்மனசு நினைக்கயிலயே கண்ணும் கலங்கி போகுது.

ராசாத்தி வயிறு புகையுது ஏதாவது சாப்பிட தாறியா... எங்கை இவள்? ராசாத்தி ராசாத்தி ....

கூடை நழுவி இருக்க சுவரில் சாய்ந்தபடி தூங்கியிருந்தாள் என் ராசாத்தி. மழைக்கு அவள் வைத்த ஒழுக்குசட்டி நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. தூக்கணாங்குருவி இரண்டு குடும்ப போட்டோவை திரும்ப திரும்ப கொத்தியபடி இருந்தது.