Sunday, September 27, 2009

சாட்சி!



முகாரி இசைக்கின்றன
விடுவிக்கப்பட்ட நிலத்தில்
வீதிகளும் வீடுகளும்
தாம் தாங்கியவரைக்
காணாது!

சல்லடைபோடுகின்றன
வன்னிக்காடுகளிலும்
வயல்வெட்டைகளிலும்
தம்மை வளர்த்தோரின்
எச்சம்தேடிகால்நடைகள்!

துணைநிற்கின்றன வேலியில்
வேர்கள் அறுக்கப்பட்டு
கிளைகள் தறிக்கப்பட்ட
கம்பிக்கட்டைகள்
கதியிழந்த எம்
உறவுகளுக்கு சாட்சியாக!

Saturday, September 26, 2009

கலையாத கனவுகள்


எண்ணச் சுழற்சியில்
சிக்கிக் கிடக்கிறது
இறந்தகாலத்தில் எழுந்தவினாக்கள்!

இன்னும் கோர்த்துமுடியவில்லை
தொண்டைக்குழிவரை
எம்பிக்குதிக்கும்
நிகழ்காலத்தின் வியாக்கியானங்கள்!

வாழ்க்கைக்கும் வார்த்தைக்குமிடையே
முயன்று முயன்று
மனம் தோற்கிறது சமரசங்கள்!

அழியாமலே
கருங்கல்சிற்பமாகியது
வாழ்வின் மீதான நம்பிக்கை!

கலையாத கனவாக
வண்ண வண்ண கோலத்தில்வந்து
என்னை மகிழ்விக்கும்எதிர்காலம்!

வழிமீது விழிவைத்து


உன் வருகையை பார்த்து

என் விழிகள் பூத்து போகின்றன

உன் அருகாமையை எண்ணி எண்ணி

என் இரவுகள் தவித்து போகின்றன

உன் மடியை தேடித் தேடி

என் முடிகள் நரைத்துப் போகின்றன

என் தவிப்புகள் புரிந்தும் ஏன் தாமதிக்கின்றாய்

என தெரியாமல் உன் வழியை

மீண்டும் ஒரு தடவை

உற்றுப் பார்க்கிறேன்!!!!

ஆசைப்படுகின்றேன் !!!




ஆசைப்படுகின்றேன்......

உன் அருகில் இருப்பதற்கு..
ஆனால் முடியவில்லை!

உனக்கு அள்ளிக் கொடுப்பதற்கு
அகத்தில் ஒன்றும் இல்லை!

உன்னை கட்டி அணைப்பதற்கு!!
கைகள் எட்டவில்லை!

எல்லாம் இருந்தும்
என்னை வெறுக்கிறேன்

இயலாமையின் காரணத்தால்....


எனது இதயம் புண்ணாய் போகின்றது
உனது உணர்வலைகளை எண்ணி

பறந்து போகின்றன எனது சோதனைகள்
உனது மன வேதனைகளை பார்த்து

உறையாமல் ஓடுகின்றது எனது குருதி
உனது மன உறுதிகளை பார்த்து

ஆசைப்படுகின்றேன்... நான்
உன் பாதணிகளாக இருக்கவாவது..
உனது கனவுகளை நோக்கிய பயணத்தில்!!!!

ஆசைப்படுவது தப்பா?

Friday, September 25, 2009

முடியாத இரவுகள்


நீண்ட இரவு
கொட்டும் பனித்துகள்
கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்
தேய்ந்துபோன நிலா
மெல்லிய குளிர்காற்று

சில்லிட்ட மெத்தையில்
தூங்க மறுக்கும் விழிகளுடன்
போராடியபடி நான்

நினைவுகளின் சுழற்சியில்
கடந்தகாலங்கள் களிப்பூட்டும்
ஏக்க பெருமூச்சுக்களாய் மட்டும்

எல்லாம் கனவோ என்கின்ற மாதிரி
கடந்து போகின்ற நிகழ்காலம்

எதிர்காலம் பற்றியஎவ்வித தீர்மானமும்
இன்னும் இல்லாத போதிலும்
கண்ணயர்ந்து போகின்றேன்
நாளை பார்க்கலாம் என்ற நம்பிக்கையுடன்
நனைந்து கிடக்கும் என் தலையணையில்

Wednesday, September 23, 2009

வருவீர்களா..........



இதை எப்படி நான் சொல்ல
இதயம் எம்பிக் குதிக்குது
மனசு துள்ளிக் கொண்டிருக்குது
எந்தன் சந்தோசம்
உங்களையும் தொத்த
என்னோடு சேர்ந்து நீங்களும்
இறக்கைகள் விரிக்க
ஆசையாக இருக்கு
இணைந்து பறக்க
என்கூட நீங்களும் வருவீர்களா..........

இழந்த சந்தோசம்
மீண்டும் வராது
சந்தோசம் என்பது
நாமே எடுப்பது
எனக்குவந்த
சந்தோசத்தை
பகிர்ந்துகொள்ள
நான்தயார்
இணைந்து பறக்க
என்கூட நீங்களும் வருவீர்களா..........

திருவிழா


திருவிழா நடத்தினர்
கடவுள்கள்
பக்தர்களும் சேர்ந்துகொண்டனர்
பயத்தில்
திருவிழா நீண்டது
வருடங்களாக
நசியுண்டு மடிந்தனர்
பக்தர்கள்
வானத்திலும் செம்மை
படர்ந்தது
பூமியில் ஓடிய பக்தர்களின்
குருதியில்
தேவர்களும் துணைக்குவந்தனர்
கடவுள்களுக்காக
பக்தர்களின் அவலஒலி
கடவுள்களுக்குக் கேட்கவில்லை
தேவர்களும் கசியவில்லை
கடவுள்களும் சிலர்
காணாமல்போயினர்
பக்தர்களும் மறந்துவிட்டனர்
கடவுள்களை
தேரிழுக்க வந்தனர் புதிய
கடவுள்கள்
தொடரலாம்
திருவிழாக்கள்

Tuesday, September 22, 2009

நட்பு



புன்னகைபூத்த வதனம்
பூவிதழ்போன்ற உள்ளம்
தெளிந்தநன் நீரோடையென
உன் அன்பு
எதையும் எதிர்பாராமலே
எல்லோருக்கும் தந்தாய்
உறவுக்கு அர்த்தம்சொல்லும்
என் இனிய உறவானாய்

ஊழிக்காலத்தில்
வீசிய சூறாவளியில்
உருக்குலைந்தது எம்கூடு
தூக்கி வீசப்பட்டநாளிலிருந்து
தேடுகிறேன்நான் உன்னை

தேடி நீயும் திரிவது
தெரிகிறது மனக்கண்ணில்
தேயாது நம்அன்பு
தேசமது மாறினாலும்
தேவதையே நீயும்
தெரிந்துகொள்!

காத்திருப்பு


ஐரோப்பாவின் ஒரு மூலையில் நான்
ஆசியாவின் ஒரு மூலையில் நீ
இதயங்கள் மட்டும் இனிமையான
நினைவுகளை சுமந்து கொண்டு
காத்திருக்குது இருவரிடமும்
நாம் சந்திக்க போகும்
அருமையான நாளிற்கு
ஏங்கியபடி
அலையை போல மனசு
அல்லாடுது கிடந்து
அவனுக்குத்தான் தெரியும்
கரையை சேரும் பொழுது

Monday, September 21, 2009

வீணை


அறையின் மூலையில் உறங்கியது

மீட்டப்படாமலே

வீணையொன்று

புதிய பல இசைகள்

எல்லோர் மனதிலும்

அலைவடிவம் பெறாமலே

அடங்கியிருந்தது

உயிர்நரம்பு அறுந்திருந்தது

வீணையிலே

எங்கிருந்தோ

வீசப்பட்டகல்லினால்

உறங்கியது வீணை

மீட்டப்படாமலே

அலைந்தன மனங்கள்

இசை அலைகளைப்

பிரசவிக்கமுடியாமலே

Sunday, September 20, 2009

துப்பாக்கி


சாகடித்துக்கொண்டேன்

நம் காதலை,

கைதியாகி,

துப்பாக்கிக்கு காவலாளி

ஆகாது தப்புவதற்காக

நீ காத்திருக்க

கழுத்தை நீட்டினேன்

விதியை நினைந்து - ஆனால்

துப்பாக்கி விளையாடியது

என்வாழ்வுடன்

சாகடித்துக்கொண்டது

என் வாழ்க்கையையே

Tuesday, September 08, 2009

அச்சம்


அச்சங்கொள்கிறது மனது
ஆழ்கடல் பயணத்தை எண்ணி
கடல் அழகானதுதான் வெளியிலிருந்து பார்க்கும்வரை
முடிவில்லாது கரையைத் தழுவும் அலைகளாக
முட்டிமோதுகின்றது எனது அச்சங்கலந்த நினைவுகளும்
முரண்பாடானது கடலின் பயணங்கள்
முயல்கிறேன் எனது அச்சத்தைக் களைய
முடிவு தெரியாத கடலின் பயணத்தில்